தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்து வருபவர் ஐ.பெரியசாமி. இவரது மகள் இந்திராணியின் வீடு திண்டுக்கல் வள்ளலார் நகரில் உள்ளது. இந்த நிலையில், இந்திராணியின் வீட்டுக்கு வந்த ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் (DGGI) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி ஐ.பெரியசாமி, அவது மகன் ஐ.பி.செந்தில்குமார் மற்றும் மகள் இந்திராணி வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இரண்டு மில்களில் அமலாக்கதுறையினர் சோதனை நடத்தியிருந்தனர்.
ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை
இப்போது இந்திராணியின் வீட்டில் 4 ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.பெரியசாமிக்கு சொந்தமான மில்களில் ஜிஎஸ்டி முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.
பின்னலாடை ஆலையிலும் தீவிர சோதனை
இவருக்கு சொந்தமான பின்னலாடை ஆலை வத்தலகுண்டு அடுத்த கே.சிங்காரக்கோட்டை அருகே ஒட்டுப்பட்டி என்ற இடத்தில் உள்ளது. இங்கு சுமார் 8,500 பேர் பணிபுரிந்து வரும் நிலையில், ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 10 பேர் அங்கு சென்றும் சோதனை நடத்தியுள்ளனர்.
அங்கு இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை சோதனை, இப்போது ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை என அடுத்தடுத்த சோதனையால் அமைச்சர் ஐ.பெரியசாமி கதிகலங்கிபோயுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


