வருவாய் அமைச்சராக இருந்தபோது சொத்து சேர்த்ததாக ஐ.பெரியசாமி மீதான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. இவர் கடந்த 2006 முதல் 2010-ஆம் ஆண்டு வரை வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த போது 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஐ.பெரியசாமி, அவரது மனைவி பி.சுசீலா, தற்போதைய பழனி திமுக எம்எல்ஏ மகனுமான பி.செந்தில்குமார், மற்றொரு மகன் பிரபு ஆகியோர் மீது திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறை கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு வழக்குப் பதிவு செய்தது.

திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் இருந்து குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த விடுதலை செய்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, 6 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்குமாறு மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி திபான்கர் தத்தா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாகப் பதிலளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.