சென்னை மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் ஏகாட்டூரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை.

திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் சென்னை மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில் பெட்டிகள் அடுத்தடுத்து தீ பிடித்து கொழுந்து விட்டு எரிவதால் அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சி தருகிறது. இந்த விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து

அப்பகுதி முழுவதும் கரும்புகை பாதிப்பால் மக்களுக்கு கடுமையான மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தீவிபத்தை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

மின்சார ரயில்கள் ரத்து

அதேபோல் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லக் கூடிய ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகளில் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

துறைமுகத்தில் இருந்து எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயிலில் 3 வேகன்கள் தண்டவாளத்தில் இருந்து விலகியதில் எரிபொருள் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த சரக்கு ரயில் தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டதே தீ விபத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வர அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் இவ்விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளனர்.