பள்ளி மாணவர்களே குஷியான அறிவிப்பு வந்தாச்சு! ஜூலை 14ம் தேதி விடுமுறை!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜூலை 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் இதனை அறிவித்துள்ளார். இதற்கு ஈடாக ஜூலை 19ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்
தமிழ்நாட்டில் அரசு விடுமுறைகளை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே விடுமுறை வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உள்ளூர் விடுமுறை
இதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு வரும் ஜூலை 14ம் தேதி திங்கட்கிழமை அன்று, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
சனிக்கிழமை வேலை நாளாக அறிவிப்பு
எனினும் ஜூலை 14ம் தேதி அன்று பள்ளி கல்லூரிகளில் தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை 19ம் வேலை நாளாக அறிவிப்பு
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூலை 19ம் சனிக்கிழமை மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் வேலை தினமாக அறிவிக்கப்படுகிறது. ஜூலை 14ம் தேதியன்று மதுரை மாவட்டம். திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட சார்நிலை கருவூலம் அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.