பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 15 முதல் 31 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படும். பக்தர்கள் மின் இழுவை ரயில் அல்லது படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்குச் செல்லலாம்.

உலக புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் திருக்கோவில். இக்கோவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் விசேஷ நாட்களாகும். இக்கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசிக்கின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பழனி முருகன் திருக்கோவில்

வார இறுதி நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அதாவது சாமியை தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் முதல் 5 மணிநேரமாகிவிடும். மேலும் பழனி கோயிலில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் பஞ்சாமிர்தம் உலக புகழ் பெற்றது.

ரோப் காரில் செல்ல ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

இந்நிலையில் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்ல படிப்பாதை இருந்தாலும் வயதானவர்கள் மற்றும் உடல் நலக்குறைபாடு உள்ளவர்கள் சிரமமின்றியும், விரைவாகவும் செல்ல ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் 3 நிமிடத்தில் செல்வது மட்டுமல்லாமல் இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம் என்பதால், அதிகமானோர் ரோப் காரில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.

ரோப் கார் சேவை நிறுத்தம்

இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருதி ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக தினமும் 1 மணி நேரமும் மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 15-ம் தேதி முதல் 31 நாட்களுக்கு ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் மின் இழுவை ரயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.