அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் இணைந்த அன்வர் ராஜா, தற்போது திமுகவில் இணைந்துள்ளார். பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அன்வர் ராஜா, திமுகவில் இணைந்ததன் பின்னணி குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் 2014 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அன்வர் ராஜா ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு சசிகலாவின் பக்கம் நின்றார். பிறகு எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான கூட்டணி பலத்த விமர்சனங்களைச் சந்தித்த காலகட்டத்தில் பாஜகவின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சிப்பவர்களுள் ஒருவராக அன்வர் ராஜா இருந்தார்.

குறிப்பாக, முத்தலாக் மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்தபோது அதை கடுமையாக எதிர்த்தார். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே பேசிவந்த அன்வர் ராஜாவுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆனாலும் அதிமுகவிலேயே தொடர்ச்சியாக நீடித்துவந்த அன்வர் ராஜா, திடீரென அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவைப்படுகிறது என்றார். சசிகலாவுக்கு ஆதரவான வார்த்தைகளையும் வெளிப்படுத்தினார். அந்த சமயத்தில்தான் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் யாரோ ஒருவரிடம் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. இதனையடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் மன்னிப்பு கடிதம் கொடுத்து அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தாலும் சில மூத்த நிர்வாகிகளுக்கு பாஜக கூட்டணி அமைக்க விருப்பம் இல்லை. குறிப்பாக அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா ஆரம்பம் முதலே பாஜகவுடனான கூட்டணியை எதிர்த்து வருகிறார். தமிழ்நாட்டில் பாஜகவால் ஒரு போதும் காலூன்ற முடியாது. கூட்டணிக்கு தலைமை அதிமுக தான், தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். இதை பாஜக ஏற்கவில்லை என்றால், இரு கட்சிகளுக்கான ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை என கூறியிருந்தார்.

இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணி வைத்ததால் அதிருப்தியில் இருந்து வந்த அன்வர் ராஜா அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளார். அதிமுக முக்கிய பிரமுகர் திமுகவில் இணைய உள்ளது அக்கட்சியின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.