- Home
- Tamil Nadu News
- மாஜி அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்.! எடப்பாடி அதிரடி உத்தரவு- இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்.! எடப்பாடி அதிரடி உத்தரவு- இது தான் காரணமா.?
முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுக-பாஜக கூட்டணிக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார்.

அதிமுக- பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் அதிமுக - பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணிக்கு அதிமுகவில் உள்ள சிறுபான்மை தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் அதிமுகவின் முக்கிய தூணாக கருதப்படுபவர் அன்வர் ராஜா, தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அன்வர் ராஜா முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமானவர், தமிழ்நாட்டின் அரசியலில் முக்கிய பங்கு வகித்தவர். அவர் அதிமுக கட்சியில் முக்கிய உறுப்பினராக இருந்து, பல பதவிகளை வகித்தவர். இவர் குறிப்பாக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 2014ஆம் ஆண்டு அதிமுக சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
யார் இந்த அனவர் ராஜா.?
2001 முதல் 2006 வரை தமிழ்நாடு அரசில் தொழிலாளர் அமைச்சராகவும் பணியாற்றினார். அன்வர் ராஜா அதிமுகவின் சிறுபான்மையினர் பிரிவு மாநிலச் செயலாளராக இருந்தவர். மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டார்.
2014இல் ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக பணியாற்றினார். இவரது பேச்சுகள், குறிப்பாக முத்தலாக் மசோதாவுக்கு எதிரான பேச்சு, கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. 2021 நவம்பரில், அதிமுகவின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டதாகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என வாதிட்டதற்காகவும், அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
திமுகவில் இணையும் அன்வர் ராஜா
2023 ஆகஸ்ட் 4 அன்று, அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிலையில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு அன்வர் ராஜா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் அனவர் ராஜா இன்று இணையவுள்ளார். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுக நிர்வாகிகள் யாரும் அன்வர் ராஜாவுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.