திமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறித்த சர்ச்சைக்குரிய பதிவால் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளார்.

வழக்கறிஞர், அரசியலாளர், கதைசொல்லி ஆசிரியர், என பன்முகத்திறமை வாய்ந்தவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் களத்திலிருப்பவர் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இதுவரை எம்.எல்.ஏ., எம்.பி.,என எந்தப் பதவியையும் வகித்ததில்லை. காமராஜர், கலைஞர் கருணாநிதி, முரசொலி மாறன், ராம்விலாஸ் பஸ்வான் என பல தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பிலிருந்தவர். தனது ஊருக்கு பக்கத்து ஊர்க்காரர் என்பதால் வைகோவுடன் நெருக்கமாக இருந்த ராதாகிருஷ்ணன், மதிமுக உதயமானபோது அக்கட்சியில் இணைந்தார். 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கோவில்பட்டியில் மதிமுக சார்பில் போட்டியிட்டார்.

ஆனால், மூப்பனார் தமாகவை உருவாக்கி திமுகவுடன் கூட்டணி வைத்த அலையில் சிக்கி தோல்வி அடைந்தார் ராதாகிருஷ்ணன். பின்னர் வைகோவுடன் மீண்டும் திமுகவில் இணைந்தார். 2011ம் ஆண்டு திமுக சார்பில் கோவில்பட்டி சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு இருந்தார். கிடைக்கவில்லை என்பதால் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்நிலையில் திமுக செய்தி தொடர்பாளராக இருந்து வந்த கே.எஸ் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே மட்டுமின்றி திமுகவினர் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து திமுக செய்தித் தொடர்பாளராக இருந்து வந்தவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். இவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து அவ்வப்போது திமுக குறித்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார். அதேவேளை பாஜகவின் செயல்பாடுகளை பாராட்டி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க நெல்லை வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் திமுக முன்னாள் நிர்வாகி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளும் திமுக முன்னாள் நிர்வாகி பாஜகவில் இணைவது முதல்வர் ஸ்டாலினை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.