திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி திவ்யப்பிரியா, உதகமண்டலத்தில் இருந்து மதுரைக்கு திரும்பி வரும்போது கார் விபத்தில் உயிரிழந்தார். மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த விபத்தில், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியது.
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி திவ்யப்பிரியா (28) சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த பல் மருத்துவரான திவ்யப்பிரியா, தனது கணவர் கார்த்திக் ராஜா மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கடந்த மே 20ஆம் தேதி உதகமண்டலத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்த நிலையில், இன்று (மே 22) மாலை உதகமண்டலத்தில் இருந்து மதுரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை
கார்த்திக் ராஜாவின் தம்பி பார்த்திபன் காரை ஓட்டி வந்துள்ளார். மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் கல்லாறு அருகே இரண்டாவது வளைவில் வந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் திவ்யப்பிரியாவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனையில் அனுமதி:
காரில் இருந்த அவரது கணவர் கார்த்திக் ராஜா, மற்றும் குடும்ப உறுப்பினர்களான பரமேஸ்வரி, வளர்மதி, ஐஸ்வர்யா உள்ளிட்ட சிலரும் காயமடைந்தனர். அவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களின் நிலை சீராக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சரின் பேத்தி உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல் மற்றும் கோவை வட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
