கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததற்கு திமுக அரசு செய்த தவறுகளே காரணம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் சென்னையை போல் கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டிருந்த நிலையில், கோவை, மதுரையில் குறைந்த மக்கள் தொகை இருப்பதாக கூறி மத்திய அரசு ஒப்புதல் கொடுக்க மறுத்துள்ளது.

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக தமிழக அரசு தவறான திட்ட அறிக்கை சமர்ப்பித்ததாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில், கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டதற்கு திமுக அரசே காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக அரசின் கவனக்குறைவு

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், ''மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க 20 லட்சம் மக்கள் தொகை இருக்க வேண்டும். ஆனால் 2011 மக்கள் தொகையில் 15 லட்சம் மக்கள் தொகை தான் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதனால் இந்த திட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள், குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திமுக அரசு கவனக்குறைவாக அனுப்பியுள்ளது.

2011 மக்கள்தொகையை குறிப்பிட்டது ஏன்?

திட்ட அறிக்கையை சமர்ப்பித்தபோது 2011 மக்கள்தொகையை திமுக அரசு குறிப்பிட்டது ஏன்? 2025ம் ஆண்டு மக்கள்தொகையை கணக்கிட்டு அனுப்பியிருந்தால் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கும். மீண்டும் திமுக அரசு குளறுபடி இல்லாமல் விரிவான திட்ட அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கோவை,மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

S.I.R பணிகளை ஆதரிப்பது ஏன்?

தொடர்ந்து பேசிய இபிஎஸ், ''S.I.R சிறப்பு திருத்த பணிகளை அதிமுக ஆதரிப்பதற்கு காரணம் போலி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று விடக் கூடாது என்பதற்காகத் தான். இந்த பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணிகளில் ஈடுபட வேண்டும். தமிழ்நாட்டில் S.I.R பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு அரசு அழுத்தம் தரக் கூடாது'' என்று கூறினார்.

மேகதாது விவாகரத்தில் திமுக அரசு அலட்சியம்

மேலும் மேகதாது அணை குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ''மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழக காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். தமிழகம் வரும் தேசிய காங்கிரஸ் தலைவரிடம் மேகதாது அணை கட்டக் கூடாது என்பதை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும்'' என்றார்.