- Home
- Tamil Nadu News
- கோவை, மதுரை மெட்ரோவுக்கு ஒப்புதல் கொடுங்க..! பிரதமர் மோடியிடம் 8 முக்கிய கோரிக்கையை சொன்ன இபிஎஸ்!
கோவை, மதுரை மெட்ரோவுக்கு ஒப்புதல் கொடுங்க..! பிரதமர் மோடியிடம் 8 முக்கிய கோரிக்கையை சொன்ன இபிஎஸ்!
கோவை, மதுரை மெட்ரோவுக்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த 8 முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் இபிஎஸ் மனு அளித்துள்ளார்.

பிரதமர் மோடியை வரவேற்ற இபிஎஸ்
பிரதமர் நரேந்திர மோடி கோவையில் தென்னிந்தியா இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக, இந்த மாநாட்டில் பங்கேற்க கோவை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று வரவேற்றார்.
அப்போது மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் இபிஎஸ் அளித்தார்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில்
இபிஎஸ் அளித்த அந்த மனுவில், 'அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை விரைவில் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும். கோவை சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்து விவசாய உற்பத்தியை மத்திய அரசு அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பயிர் வாரியாக இயற்கை வேளாண்மை ஊக்கத்தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்.
ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்
இயற்கை முறையில் பயிரிடப்பட்ட பயிர்களை நேரடியாக சந்தைப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மறு சுழற்சிக்கான பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். மோட்டார் பம்புசெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
ராமேஸ்வரம், கோவை இடையே மீண்டும் ரயில் சேவையை கொண்டு வர வேண்டும். பெங்களூரு, கோவை இடையே இரவு நேர ரயில் இயக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
கோவை, மதுரை மெட்ரோவுக்கு ஒப்புதல் கிடைக்குமா?
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரங்களான கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ஒப்புதல் கோரி சென்னை மெட்ரோ நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், குறைந்த மக்கள் தொகையை காரணம் காட்டி கோவை, மதுரை மெட்ரோவுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
மத்திய அரசு பாராமுகமாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலினும் தெரிவித்து இருந்தார். இப்போது பாஜக கூட்டணியில் உள்ள இபிஎஸ் மனு அளித்ததன் மூலம் கோவை, மதுரை மெட்ரோவுக்கு ஒப்புதல் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

