- Home
- Tamil Nadu News
- சிறு வயதில் தமிழ் கற்கவில்லை என வருத்தம்..! தமிழ்க் கடவுள் முருகன் குறித்தும் பேசிய பிரதமர் மோடி!
சிறு வயதில் தமிழ் கற்கவில்லை என வருத்தம்..! தமிழ்க் கடவுள் முருகன் குறித்தும் பேசிய பிரதமர் மோடி!
கோவையில் தென்னிந்தியா இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சிறு வயதில் தான் தமிழ் கற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்தார். தமிழ்க்கடவுள் முருகன் குறித்தும் பிரதமர் பேசினார்.

கோவையில் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி கோவையில் தென்னிந்தியா இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, சிறு வயதில் தமிழ் கற்காதது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அதாவது வணக்கம் என தமிழில் கூறி பேச்சைத் தொடங்கிய பிரதமர் மோடி, ''சிறு வயதில் தமிழ் கற்க முடியவில்லையே என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சிறு வயதில் எனக்கு தமிழ் சொல்லப்பட்டிருந்தால் நான் உங்களுடன் தமிழில் பேசியிருப்பேன்.
தமிழ் புரியவில்லை
பி.ஆர்.பாண்டியனின் பேச்சு அருமையாக இருந்தது. எனக்கு தமிழ் புரியாவிட்டாலும், அவரது உணர்வு எனக்கு புரிய வைத்தது. பி.ஆர்.பாண்டியனின் பேச்சை எனக்கு இந்தியில் மொழிபெயர்த்து அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன்'' என்றார். மேலும் தமிழ்கடவுளான முருகன் பெயரையும் பிரதமர் மோடி அடிக்கடி குறிப்பிட்டார். கோவை மண் மருதமலையில் தமிழ்க்கடவுள் முருகன் வீற்றிருக்கும் மண் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
முருகப்பெருமானுக்கு படைக்கும் உணவு
''தமிழக உணவுப்பட்டியலில் சிறு தானியங்கள் உள்ளன. தமிழகத்தில் கம்பு, சாமை காலங்காலமாக உள்ளது. தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு தேனும், திணையும் படைக்கிறோம்'' என்று கூறினார். முன்னதாக பிரதமர் மோடி தனது பேச்சை தொடங்கும்போது, ''நான் இந்த மாநாட்டுக்கு வந்தபோது பச்சை துண்டை வீசி விவசாயிகள் என்னை வரவேற்றனர். விவசாயிகளின் அளவு கடந்த அன்பால் பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறதோ என்று எண்ணினேன்'' என்று கூறியிருந்தார்.
பிரதமர் இனி அடிக்கடி தமிழகம் வருவார்
பீகார் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் பிரம்மாண்ட வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. விவசாயிகள் திரண்டு வந்து வரவேற்பு அளித்ததால் அதை வைத்து தமிழ்நாட்டிலும் பீகார் போல் வெற்றி பெறுவோம் என்பதை கூறும் வகையில் பிரதமர் பேசியுள்ளார்.
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தமிழ் குறித்தும், தமிழ்க்கடவுள் முருகன் குறித்தும் பிரதமர் பேசியுள்ளதாக திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தெரிவித்துள்ளன. தேர்தல் நெருங்குவதால் பிரதமர் இனிமேல் அடிக்கடி தமிழகம் வருவார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

