தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதிதாக கட்சி தொடங்கியவர்களை மறைமுகமாக விமர்சித்தார். கட்சி தொடங்கிய உடனே ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
மக்களைக் காப்போம், தமிழகம் மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று காஞ்சிபுரத்தில் பேசியபோது, புதிதாக கட்சி தொடங்கியவர்களை மறைமுகமாக கடுமையாக விமர்சித்தார்.
திமுகவை ஒழிக்கவே அதிமுக
"கட்சியை ஆரம்பித்த உடனே ஆட்சியைப் பிடிக்க முடியாது. கட்சி தொடங்கி கடுமையாக உழைத்தவர்கள் தான் ஆட்சிக்கு வர முடியும்" என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். மேலும், "புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லோரும் நமது தலைவர்கள் படம் போட்டுத்தான் தொடங்க முடியும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுக தொடங்கப்பட்டதன் நோக்கமே திமுகவை ஒழிப்பதுதான் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, "உழைப்பை தராமல் சிலர் பலனை எதிர்பார்க்கிறார்கள். ஒரு மரம் எடுத்ததும் கனியைத் தராது, வளர்ந்து காய்த்த பிறகுதான் கனியைத் தரும்" என்று மறைமுகமாக சாடினார்.
விஜய்க்கு பதிலடி
மதுரையில் தவெக மாநாட்டில் பேசிய விஜய், அதிமுகவையும், அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். பாஜகவுடன் அதிமுகவின் கூட்டணி பொருந்தாத கூட்டணி என்று சாடினார். எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக இப்போது யார் கையில் இருக்கிறது எனக் கேள்வி எழுப்பிய அவர், அதிமுக தொண்டர்கள் அனைவரும் வேதனையை வெளியே காட்ட முடியால் தவிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில், விஜய்யின் இந்த பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி நேரடியாக பதிலளிக்காமல், மறைமுகமாக அவரை விமர்சித்துள்ளார்.
