உள்ளடி வேலை... ஓரவஞ்சனை... மைனாரிட்டி பாஜக அரசை பொளந்து கட்டிய விஜய்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பாஜக தலைமையிலான மத்திய அரசை மதுரை மாநாட்டில் கடுமையாக விமர்சித்தார். மத நல்லிணக்கம், நீட் தேர்வு, கச்சத்தீவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் போக்கை விஜய் சாடினார்.

மைனாரிட்டி பாஜக அரசு - விஜய் கடும் விமர்சனம்
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் மதுரை வளையங்குளத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய கட்சித் தலைவர் விஜய், பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். மத நல்லிணக்கம், நீட் தேர்வு, கச்சத்தீவு போன்ற பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளை அவர் கடுமையாக சாடினார்.
மத நல்லிணக்கத்திற்குப் பெயர் பெற்ற மதுரை மண்ணில் இருந்து பேசுகிறேன் என்று தொடங்கிய விஜய், "இஸ்லாமிய நண்பர்களுக்கு எதிராக சதி செய்வதற்கா ஆட்சிக்கு வந்தீர்கள்? உங்கள் எண்ணம் ஒருநாளும் நிறைவேறாது" என்று ஆவேசமாக பேசினார். மத்திய பாஜக அரசு, மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்துவதாக குற்றம் சாட்டினார்.
நீட் தேர்வு, கச்சத்தீவு
மாணவர்களின் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்திய விஜய், "எங்கள் தமிழக மீனவர்கள் 800 பேருக்கு மேல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கச்சத்தீவை மீட்டுக்கொடுக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார். மத்திய அரசு தமிழகத்திற்கு ஆதரவாக செயல்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மத்திய பாஜக அரசை "மைனாரிட்டி ஆட்சி" என்று கூறிய விஜய், "கூட்டணிக் கட்சிகளை மிரட்டி 2029 வரை சொகுசுப் பயணம் செய்கிறார்கள்" என சாடினார். பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களது உரிமைகளை இழந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்யும் பாஜக
"தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது, தமிழக மக்கள் மட்டும் எப்படி ஒட்டுவாங்க?" என்று தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கை விஜய் கேலி செய்தார். ஒரு எம்.பி. சீட் கூட தராததால் பாஜக அரசு தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்வதாக குற்றம் சாட்டினார். "கீழடி நாகரிகத்தை மறைக்க உள்ளடி வேலைகள் செய்கிறார்கள்" என்றும் அவர் கூறினார்.
அதிமுக-பாஜக கூட்டணியை "பொருந்தாத கூட்டணி" என்று விமர்சித்த விஜய், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள் குறித்தும் பேசினார். "எதிரியைக் கூட மக்களிடம் கெஞ்ச வைத்தவர் எம்ஜிஆர். இப்போது அந்தக் கட்சி யார் கையில் இருக்கிறது? அக்கட்சியின் தொண்டர்கள் வேதனையை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்" என்று கூறினார். விஜய்யின் இந்த பேச்சுக்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.