திமுக.வில் இணைவதற்கு முன்னாள் செந்தில் பாலாஜியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சிக்கும் வீடியோவைப் பகிர்ந்த எடப்பாடி பழனிசாமி தற்போது திமுக.வில் இணைந்ததும் செந்தில் பாலாஜி புனிதராகிவிட்டாரா என கேள்வி எழுப்பி உள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நான் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு முகத்தை மறைத்தபடி வெளியேறியதாக சொல்லியுள்ளார். நான் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியே வரவேண்டிய அவசியம் இல்லை. முகத்தை துடைக்கும் போது அதனை புகைப்படமாக எடுத்து தவறாக பிரசாரம் செய்கிறார்கள்.
செந்தில் பாலாஜியை புகழ்ந்த ஸ்டாலின்
மேலும். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, நாங்கள் கோடு போட்டால் ரோடு போட்டுவிடுவார் என்று புகழ்ந்து பேசுகிறார். இது முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜி திமுக.வில் இணைவதற்கு முன்பாக என்ன பேசினார் என்று தெரியுமா.? என்று கூறி பழைய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் பேசியிருந்த ஸ்டாலின், “இந்த மாவட்டத்தில் செந்தில்பலாஜி என்று ஒரு அமைச்சர் இருந்தார். கிட்டத்தட்ட அமைச்சரவையில் 15 முறை மாற்றம் செய்யப்பட்ட போது இவரை மட்டும் மாற்றவே இல்லை.
குறும்படம் காட்டிய பழனிசாமி
அந்த அளவிற்கு முக்கியமான நபராக இருந்தார். சசிகலாவுக்கும், குறிப்பாக இளவரசிக்கும் மிகவும் நெருக்கமான அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. சசிகலா சிறைக்கு சென்றபோது யாரை முதல்வராக்கலாம் என்ற பட்டியலில் செந்தில் பாலாஜியின் பெயரும் இருந்தது. செந்தில் பாலாஜி மட்டும் அல்ல அவரது தம்பி இந்த ஒட்டுமொத்த கரூர் மாவட்டத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதாவது கொள்ளை அடிப்பது, ஊழல் செய்வது, லஞ்சம் வாங்குவது உள்ளிட்டவற்றில் கரூர் மாவட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
செந்தில் பாலாஜி எப்போது புனிதரானார்..?
தமிழகத்திலேயே அதிகமாக கேபிள் டிவிக்கு பணம் கட்டும் மாவட்டமாக கரூர் உள்ளது. ஏனென்றால் இந்த மாவட்டத்தில் செந்தில் பாலாஜியின் பிணாமியில் அதிகமான தனியார் சேனல்கள் செயல்படுகின்றன. எம்.பி.யாக இருந்தாலும் சரி, அமைச்சராக இருந்தாலும் சரி லஞ்ச லாவன்யத்தில் கொடிகட்டி பறக்கும் நபராக செந்தில் பாலாஜி இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார்” இந்த வீடியோவைப் பகிர்ந்த பழனிசாமி. இப்படியெல்லாம் பேசப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது திமுக.வில் இணைந்ததும் புனிதராகிவிட்டாரா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
