உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த நான் முகத்தை துடைத்ததை புகைப்படமாக வெளியிட்டு நான் முகத்தை மறைத்துக் கொண்டு வந்ததாக பொய் செய்தி பரப்பப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 16ம் தேதி கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வரும் பொழுது பழனிசாமி முகத்தை மறைத்தபடி வெளியே வந்ததாக புகைப்படம், செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் அந்த கூட்டணியின் தலைவர் நான் தான் என்பதை அமித்ஷாவே தெளிவுபடுத்தி உள்ளார். அப்படி இருக்கும் பட்சத்தில் நான் ஏன் உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு முகத்தை மூடிக்கொண்டு வெளியே வரவேண்டும்.?
நாங்கள் அவருடன் சந்தித்து பேசிய போது அவர் வேறு சிலருடன் ஆலோசனையில் இருந்த காரணத்தால் நாங்கள் அங்கே சிறிது நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது தான் என் உடன் வந்த மூத்த நிர்வாகிகளை அனுப்பிவிட்டு அமித்ஷாவுடன் 10 நிமிடங்கள் தனிமையில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டேன். இந்த சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியே வரும்பொழுது முகத்தை துடைத்ததை புகைப்படமாக எடுத்து நான் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வருவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.
நான் அமித்ஷாவை சந்திக்க பகிரங்கமாக சென்று வருவேன். முகத்தை மறைத்துக்கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை.
யாருடன் சென்றேன் என கேட்காதீர்கள்
நான் மத்திய அமைச்சரை சந்தித்தபோது யாருடன் சென்றேன் என்று கூறவேண்டிய அவசியம் இல்லை. அதனை கேட்க வேண்டாம். என்னிடம் தனியாக கார் இல்லாத காரணத்தால் கிடைக்கும் கார்களில் பயணிக்கும் நிலை உள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.


