வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக 210 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. 5000க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த வகையில், “· அதிமுக – பாஜக இடையே கூட்டணி அமைத்ததற்கு பொதுக்குழு ஒப்புதல்
· சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது ; கூட்டணிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம்
· கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்
· மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு தோல்வியடைந்துள்ளது
· தீவிர வாக்காளர் திருத்த பணியான SIR யை அதிமுக வரவேற்கிறது
· நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22%மாக உயர்த்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
· வேருக்கு வெந்நீரையும் விவசாயிகளுக்கு கண்ணீரையும் தொடர்ந்து தந்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுப்பு
· முதலீட்டில் ஆமை வேகம், குறையும் முதலீடுகள் ! தமிழக மக்களை ஏமாற்றி, போலி புள்ளி விவரங்களை அள்ளி வீசும் முதலமைச்சருக்கு கண்டனம்
· தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சிறுமிகள், இளம் பெண்கள், வயதான பெண்கள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது – காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சருக்கு கண்டனம்
· வருவாய் செலவினத்திற்கு ஊதாரித்தனமாக செலவழித்துவிட்டு, தமிழக மக்களை தொடர்ந்து கடனாளியாக்குகிறது திமுக அரசு
· தொடர் கொள்ளைகள், கொலைகள்,வழிபறி என சட்டம் ஒழுங்கு சரிந்து கிடக்கிறது காவல்துறை அமைச்சர் முதலமைச்சருக்கு கண்டனம்
· நீட் உளிட்ட திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாதற்கு கண்டனம்
· மதுரை மேயர் ராஜினாமா செய்யும் அளவிற்கு ஊழல் நடைபெற்றிருப்பதற்கு கண்டம்
· பட்டியலினத்தவர்களை ஒதுக்கி வைப்பது திமுக ஆட்சியில் நடந்துகொண்டிருப்பதற்கு கண்டனம்
· நீதித்துறை மீதான ஆட்சியாளர்களின் மிரட்டல்களை கைவிடவேண்டும். நீதித்துறையில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது. நீதித்துறைக்கே சவால்விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனநிலையை பொதுக்குழு கண்டிக்கிறது
· எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சர் ஆக்க சூளுரைப்போம்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும். இதனை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. பாஜகவிற்கு நாங்கள் அடிமை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து விமர்சிக்கிறார். அதிமுக யாருக்கும் எப்போதும் அடிமையாக இருந்தது இல்லை. பல்வேறு சதித்திட்டங்களை தாண்டி ஆட்சி அமைத்தோம். இன்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம் ஆட்சியை விமர்சிக்க முடியவில்லை. அத்தகைய ஆட்சியை கொடுத்தது அதிமுக.
அதிமுக, பாஜக கூட்டணி என்றுதான் சொல்கிறார்கள். அதைத் தாண்டி எதாவது ஆட்சியில் குறை சொல்ல முடிந்ததா? அதிமுக அரசு பொற்கால ஆட்சியை கொடுத்தது. அதே ஆட்சி மீண்டும் தமிழ்நாட்டில் வர நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.


