செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதற்கு செல்வபெருந்தகையை கூப்பிடாததில் எந்த தவறும் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். செல்வபெருந்தகையின் பேச்சு வருத்தம் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. கிருஷ்ணா நதிநீர் வருகை அதிகரித்ததாலும், புறநகர் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாகவும் சென்னையின் குடிநீர் ஆதாரமாக திகழும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் அதிகரித்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடியாக உள்ள நிலையில் 21 அடியை தொட்டதால் கடந்த 21ம் தேதி ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அதிகாரிகளை கடிந்து கொண்ட செல்வபெருந்தகை
இதற்கு மறுநாள் அதாவது 22ம் தேதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தன்னிடம் தகவல் தெரிவிக்காமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்தது ஏன் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் செல்வபெருந்தகை கடிந்து கொண்டார். ''செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதற்கு முன்பு என்னிடம் தகவல் தெரிவித்து இருக்க வேண்டாமா? நீர்வளத்துறை அரசு துறை தானே.
பொதுப்பணித்துறையில் வெறி பிடிச்ச ஆள்
ஏரியை திறக்கும்போது மக்கள் பிரதிநிதிகளிடம் ஒரு வார்த்தை சொன்னால் என்ன? அதுதானே மரபு. கடந்த ஆண்டும் என்னிடம் சொல்லாமல் ஏரியை திறந்து வைத்தீர்கள். நீங்களே மக்கள் பிரநிதிநிதியாகி விட்டால் பிறகு எதற்கு அரசு? அதிகாரிகளே அரசை நடத்தலாமே. பொதுப்பணித்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே தெரியவில்லை. இந்த துறையில் ஒரு வெறி பிடிச்ச ஆள் இருக்கிறார்'' என்று செல்வபெருந்தகை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
செல்வபெருந்தகை பேசியது வருத்தம் அளிக்கிறது
இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி குறித்து செல்வபெருந்தகையின் பேச்சு வருத்தம் அளிக்கிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த துரைமுருகன், ''செல்வபெருந்தகை போன்ற ஒரு அரசியல் கட்சி தலைவர் இப்படி கூறியதற்காக நான் வருத்தப்படுகிறேன். உண்மை என்ன என்பதை அறிந்து பேச வேண்டும்.
கூப்பிடாததில் தவறு இல்லை
முதன் முறையாக பருவ மழை காலத்தில் மேட்டூர் அணை நிரம்பும்போது தான் முதல்வர் வந்து திறப்பார். அதன்பிறகு அணையை அதிகாரிகள் தான் திறப்பார்கள். செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க கூப்பிடவில்லை என்றால் கூப்பிடலை தான். இதில் என்ன தவறு உள்ளது? இது யாருமே கூப்பிட மாட்டார்கள். ஆனால் இதை வைத்து இப்படி அவர் பேசியிருக்கிறார். அங்கு ஒருத்தார் இருக்கிறார்; இங்கு ஒருத்தர் இருக்கிறார் என்று கூறுகிறார். நான் ஒண்ணு சொல்றேன். அங்கு ஒருத்தன் இருக்கிறான். இதனால் தான் இந்த தொல்லை'' என்று தெரிவித்தார்.
