கரூர் சம்பவம் குறித்து தமிழக அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையத்தை காங்கிரஸ் தலைவர் ஒருவர் விமர்சித்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அவரிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தில் ஏற்படட் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது.

ஒரு நபர் ஆணையத்தை விமர்சித்த காங்கிரஸ் தலைவர்

இந்த விசாரணை ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டினார்கள். இதற்கிடையே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரும் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தை விமர்சித்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதாவது காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஏ.பி.சூரியபிரகாசம், ''அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் நியமனம்' தவறு என்று கூறியிருந்தார்.

செல்வபெருந்தகை அதிரடி உத்தரவு

கூட்டணி கட்சியை சேர்ந்த ஒருவரே திமுக அரசு அமைத்த விசாரணை ஆணையத்தை தவறு என்று விமர்சித்தது திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தோடர்பாக காங்கிரஸ் கட்சியினருக்கு செல்வபெருந்தகை அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என திமுகவினர் அறிவுறுத்தினர். இந்நிலையில்., கரூர் விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியினர் யாரும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை சொல்லக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உத்தரவிட்டுள்ளார்.

அரசியலாக்க கூடாது

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வழக்கறிஞர் ஏ.பி. சூரியப்பிரகாசம் அவர்களுக்கு, வணக்கம். கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை இந்த துயர சம்பவத்தை எவ்விதத்திலும் அரசியலாக்க கூடாது என்ற நோக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் துணை நின்று அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளது.

விளக்கம் அளிக்க வேண்டும்

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக பதவி வகித்துவரும் தாங்கள் தொலைக்காட்சிகளில் கட்சியின் முடிவுகளுக்கு எதிராகவும், தமிழக அரசு சார்பில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையம் குறித்து விமர்சித்தும் பேட்டியளித்துள்ளீர்கள்.

தங்களுடைய இந்த செயல் கட்சியின் முடிவுகளுக்கு எதிராக உள்ளதால் இந்த கடிதம் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் தங்களின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு உரிய விளக்கத்தை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறப்பட்டுள்ளது.