திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தது தவறு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
காங்கிரஸ் கட்சியின் கரூர் மகளிர் அணி தலைவி எஸ்.கவிதா, முன்னாள் அமைச்சரும், திமுகவின் கரூர் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இது குறித்து செந்தில் பாலாஜி போட்ட ட்வீட் சர்ச்சையானது.
அதாவது அவர் ''தமிழ்நாடு தலை நிமிர, மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலினின் தலைமையே தேவை என்று உணர்ந்து கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் எஸ்.கவிதா தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார்'' என்று எக்ஸ் தளத்தில் கூறியிருந்தார்.
செந்தில் பாலாஜிக்கு ஜோதி மணி கண்டனம்
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் மகளிர் அணியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் காங்கிரஸ் எம்.பி ஜோதி மணியும் பொங்கியெழுந்தார். ''கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். திமுகவின் மாவட்ட செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது? கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்'' என்று ஜோதி மணி எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
சமரசம் செய்து கொள்ள முடியாது
''கூட்டணி என்பது ஒரு கொள்கை அடிப்படையில், பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. எந்தச் சூழலிலும் இதில் எதனோடும் சமரசம் செய்துகொள்ள முடியாது'' என்றும் ஜோதி மணி கூறியிருந்தார். இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையும் செந்தில் பாலாஜி செய்தது தவறு என்று தெரிவித்துள்ளார்.
செல்வபெருந்தகை கண்டனம்
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை, ''நேற்று தான் எனக்கு இந்த தகவலை சொன்னார்கள். அவர் (செந்தில் பாலாஜி) கூட்டணியில் இருக்கும்போது காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரை சேர்த்தார் என்று ட்வீட் போட்டிருந்தார். அது மாதிரி செய்யக் கூடாது. நான் இதை முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.
அதன்பிறகு அந்த ட்வீட் நீக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் இப்படி செய்ய வேண்டாம். இதை செய்வதால் அவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு தான் நெருக்கடி கொடுக்கிறார்கள். இதை இனிமேல் தவிர்க்க வேண்டும் என்பது தான் எங்களுடைய வேண்டுகோள்'' என்றார்.
