கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் விபத்து போல் தெரியவில்லை. இதில் ஏதோ மர்மம் உள்ளதாக பாஜக எம்.பி ஹேமமாலினி தெரிவித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தனர்.

என்.டி.ஏ. எம்.பி.க்கள் குழு விசாரணை

இந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் நிதியுதவி அறிவித்தன. இதேபோல் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அறிவித்தன. இந்நிலையில், கரூர் சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்த என்.டி.ஏ. எம்.பி.க்கள் குழுவை பாஜக அமைத்தது. இதனைத் தொடர்ந்து எம்.பி.க்கள் ஹேமமாலினி, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் அடங்கிய இந்த உண்மை கண்டறியும் குழுவினர் கரூர் வந்து நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விசாரணை நடத்தினார்கள்.

கரூர் சம்பவத்தில் மர்மம் உள்ளது

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஹேமமாலினி, ''கரூர் கூட்டநெரிசல் சம்பவம் விபத்து போல் தெரியவில்லை. இதில் ஏதோ மர்மம் உள்ளது. சந்தேகம் உள்ளது. பெரிய நடிகரான விஜய் பிரச்சாரம் செய்ய குறுகிய இடத்தில் அனுமதி கொடுத்தது நியாயமில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த தேவையுள்ளது'' என்று தெரிவித்தார்.