எடப்பாடி, அண்ணாமலைக்கு விஜய் நன்றி.. துணை நின்றதால் நெகிழ்ச்சி பேச்சு!
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார். தனக்கு துணையாக நின்ற எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்
கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கரூர் சம்பவம் நடந்தவுடன் விஜய் உடனே சென்னை கிளம்பி சென்றது கடும் விமர்சனத்தை உண்டாக்கியது. இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் முதன்முறையாக வாய் திறந்து பேசியுள்ளார்.
உருக்கமான வீடியோ வெளியிட்ட விஜய்
இது தொடர்பாக உருக்கமான வீடியோ வெளியிட்ட விஜய், ''என் வாழ்வில் இதுபோன்ற ஒரு துயரத்தை பார்த்தது இல்லை. நடக்க கூடாதது நடந்து விட்டது. எனது மனம் முழுவதும் வலி மட்டும் தான். பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் சந்திப்பேன். 5 மாவட்டத்துக்கு பிரசாரத்துக்கு சென்றோம். கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். கரூர் மக்கள் உண்மையை சொல்லும்போது கடவுளே வந்து உண்மையை சொல்வது போல் உள்ளது.
மக்களை ஏதும் செய்யாதீர்கள் சி எம் சார்
நாங்கள் காவல்துறை அனுமதி வழங்கிய இடத்தில் தான் பிரசாரம் செய்தோம். வேறு ஏதும் செய்யவில்லை. சி எம் சார் என்னை பழிவாங்க வேண்டும் என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். என்னை பழிவாங்குங்கள். மக்களை ஏதும் செய்யாதீர்கள். வேறு அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என்று தான் நான் உடனே ஹாஸ்பிடல் போகல. நண்பர்களே.. தோழர்களே எனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும்'' என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்களுக்கு நன்றி சொன்ன விஜய்
தொடர்ந்து தனக்கு ஆதரவாக நின்ற எடப்பாடி, அண்ணாமலைக்கு நன்றி சொன்ன விஜய், ''இந்த கடினமான காலத்தில் எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.