- Home
- Tamil Nadu News
- என்கிட்ட கேட்காம செம்பரம்பாக்கம் ஏரியை ஏன் திறந்தீங்க? அரசை நடத்தும் அதிகாரிகள்.. பொங்கிய செல்வபெருந்தகை!
என்கிட்ட கேட்காம செம்பரம்பாக்கம் ஏரியை ஏன் திறந்தீங்க? அரசை நடத்தும் அதிகாரிகள்.. பொங்கிய செல்வபெருந்தகை!
என்னிடம் கேட்காமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்தது ஏன்? என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கோபத்தை வெளிப்படுத்தினார். அதிகாரிகள் அரசை நடத்துவதாக குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை உள்பட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கிருஷ்ணா நதிநீர் வருகை அதிகரித்ததாலும், புறநகர் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாகவும் சென்னையின் குடிநீர் ஆதாரமாக திகழும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் அதிவேகமாக அதிகரித்தது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு
மொத்தம் 24 அடி உயரம் கொண்ட செம்பரபாக்கம் ஏரியில் நீர்மட்டம் 21.20 அடியை தொட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை 4 மணிக்கு ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அடையாற்று ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நிலையை அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.
செல்வபெருந்தகை ஆய்வு
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ செம்பரம்பாக்கம் ஏரியினை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏரியில் நீர் இருப்பு எவ்வளவு உள்ளது? எவ்வளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது? என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் என்னிடம் தகவல் தெரிவிக்காமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்தது ஏன்? என அதிகாரிகளை வசைபாடினார்.
என்னிடம் கேட்காமல் திறந்தது ஏன்?
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை உடன் இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், ''செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதற்கு முன்பு என்னிடம் தகவல் தெரிவித்து இருக்க வேண்டாமா? நீர்வளத்துறை அரசு துறை தானே. ஏரியை திறக்கும்போது மக்கள் பிரதிநிதிகளிடம் ஒரு வார்த்தை சொன்னால் என்ன? அதுதானே மரபு. காலம் காலமாக நான் தான் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து வைத்து வருகிறேன்.
அரசே அதிகாரிகளை நடத்தலாமா?
கடந்த ஆண்டும் என்னிடம் சொல்லாமல் ஏரியை திறந்து வைத்தீர்கள். தப்பு கிடையாது திறந்து வைங்க. நீங்களே மக்கள் பிரதிநிதியாக மாறுங்கள். இப்போது நான் தானே ஊர் ஊராக போகிறேன். மக்கள் கவனமாக இருக்கும்படி நான் தான் சொல்லப்போகிறேன். நீங்களே மக்கள் பிரநிதிநிதியாகி விடால் பிறகு எதற்கு அரசு? இதெல்லாம் தவறு இல்லையா? அதிகாரிகளே அரசை நடத்தலாமே. உங்க துறை (பொதுப்பணித்துறை) யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே தெரியவில்லை'' என்று கடிந்து கொண்டார்.