- Home
- Tamil Nadu News
- செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு! சென்னையில் இந்த பகுதிகளில் வெள்ள அபாயம்! மக்களே உஷார்!
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு! சென்னையில் இந்த பகுதிகளில் வெள்ள அபாயம்! மக்களே உஷார்!
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டுள்ளதால் சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதேபோல் சென்னையிலும் விட்டு விட்டு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சென்னை எழும்பூர், அண்ணாநகர், சென்ட்ரல், சிந்தாரிப்பேட்டை என நகரின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு
கிருஷ்ணா நதிநீர் வருகை அதிகரித்ததாலும், புறநகர் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாகவும் சென்னையின் குடிநீர் ஆதாரமாக திகழும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடியாக உள்ள நிலையில், இன்று நீர்மட்டம் 21.20 அடியை தொட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 4 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
எந்தெந்த பகுதிகளில் வெள்ள அபாயம்?
வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில், அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, சிறுகளத்தூர் ஆகிய இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னையில் அதிக மழை எங்கே?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தில் நான்கு இடங்களில் மிக கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகப்பட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 17 சென்டிமீட்டர் மழை கொட்டியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக மேடவாக்கம் பகுதியில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.