தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெகமெடுத்துள்ள நிலையில், மக்களுக்கு உதவ திமுக, அதிமுக கட்சிகள் தொண்டர் படைகளை களமிறக்க உள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக கடற்கரையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் கனமழை வெளுத்தெடுத்து வருகிறது. சென்னையிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் மழை

தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்க்கும் நிலையில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், , திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திரூவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

திமுக, அதிமுக தொண்டர் படைகள்

பருவமழை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொளும்படி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், பருவமழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ திமுக, அதிமுக கட்சிகள் தொண்டர் படைகளை களமிறக்க உள்ளன.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''தமிழகத்தில் மழை அதிகமாகும் வாய்ப்பு உள்ளதால், போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இபிஎஸ் உத்தரவு

பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்புகளின் அடிப்படையில், பாதுகாப்போடு இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள அதிமுக , நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

திமுக மழை குறித்த ஆலோசனை கூட்டம்

இதேபோல் திமுக சார்பில் நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்னை, தாம்பரம், ஆவடி திமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மேயர்கள், துணை மேயர்கள், மாவட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

தேர்தல் நேரம்; போட்டி போட்டு உதவ ரெடி

இதில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திமுக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்படும். பொதுவாக மழை, பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவ பிரதான கட்சிகள் தொண்டர் படைகளை களமிறக்குவது வழக்கம் தான். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் போட்டி போட்டு மக்களுக்கு கைகொடுக்க ரெடியாகி வருகின்றனர்.