ஆந்திராவின் கர்னூலில் நடந்த பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு போதையில் இருந்த பைக் ஓட்டுநரே காரணம் எனத் தெரியவந்த நிலையில், போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் 'பயங்கரவாதிகள்' என ஹைதராபாத் காவல்துறை ஆணையர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கர்னூலில் அண்மையில் நடந்த கோரப் பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் 'பயங்கரவாதிகள்' என்றும், அவர்களுக்கு எந்தவித கருணையும் காட்டப்படாது என்றும் ஹைதராபாத் காவல்துறை ஆணையர் வி.எஸ். சஜ்ஜனார் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் படுக்கை வசதி கொண்ட பேருந்து, ஆந்திராவின் கர்னூல் அருகே ஏற்கனவே விபத்தில் சிக்கியிருந்த ஒரு இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த மோதலில் பேருந்தில் தீப்பிடித்து எரிந்ததில், இருசக்கர வாகன ஓட்டுநர் மற்றும் 19 பயணிகள் என மொத்தம் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பயங்கரவாதச் செயல்

இந்த விபத்து குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ள காவல்துறை ஆணையர் வி.எஸ். சஜ்ஜனார், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் குறித்து மிகக் கடுமையான கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் பயங்கரவாதிகள். இவர்களின் செயல், சாலைகளில் நிகழ்த்தப்படும் பயங்கரவாதச் செயல்தான்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

கர்னூலில் 20 அப்பாவி உயிர்களைப் பலி கொண்ட இந்தக் கோரச் சம்பவம், உண்மையான அர்த்தத்தில் ஒரு 'விபத்து' அல்ல. போதையில் இருந்த இருசக்கர வாகன ஓட்டுநரின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட 'தடுக்கக்கூடிய படுகொலை' இது.

இது சாலை விபத்து அல்ல, ஒரு சில நொடிகளில் பல குடும்பங்களை அழித்த "குற்றவியல் அலட்சிய செயல்" ஆகும்.

குடித்துவிட்டு ஓட்டியதே காரணம்

விபத்தில் பலியான இருசக்கர வாகன ஓட்டுநர், பி. சிவ சங்கர் என்பவர், மது அருந்திய நிலையில் வாகனத்தை ஓட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் அதிகாலை 2:24 மணிக்கு பெட்ரோல் நிரப்பியதாகவும், அதன் பிறகு சில நிமிடங்களில் 2:39 மணிக்குக் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்தை ஏற்படுத்தியதாகவும் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

அவரது போதையில் வாகனம் ஓட்டும் முடிவு, ஒரு மிகப்பெரிய துயரமாக மாறியுள்ளது.

அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்து

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் பல குடும்பங்களின் எதிர்காலத்தை அழிக்கிறார்கள் என்று வலியுறுத்திய சஜ்ஜனார், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை ஹைதராபாத் காவல்துறை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது எனத் தெரிவித்தார்.

"மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது பிடிபடும் ஒவ்வொருவரும் சட்டத்தின் முழு பலத்தையும் எதிர்கொள்வார்கள். அப்பாவிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பவர்களுக்கு எந்தவித சலுகையும், விதிவிலக்கும், கருணையும் இருக்காது," என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை ஒரு 'தவறு' என்று சொல்வதை சமூகம் நிறுத்த வேண்டும் என்றும், அது வாழ்க்கையைச் சிதைக்கும் குற்றம் என்றும் கூறினார். போதையில் வாகனம் ஓட்டிப் பிடிபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.