திமுக, காமராஜரின் புகழை மறைக்க முயற்சிப்பதாகவும், அவரது பிம்பத்தை சிதைக்க முயல்வதாகவும் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். காமராஜரை மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெருந்தலைவர் காமராஜரின் புகழை மறைக்க எவ்வளவோ முயற்சிகளை திமுகவினர் செய்து வருகின்றனர். ஆனாலும் பெருந்தலைவர் காமராஜரை தமிழக மக்களின் மனங்களில் இருந்து அகற்ற முடியவில்லை என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான திருச்சி சிவா, எளிமை, தியாகம், வளர்ச்சிக்காக பேசப்படும் பெருந்தலைவர் காமராஜரை, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தது போன்ற பிம்பத்தை கட்டமைக்க முயற்சித்துள்ளார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவிக்க, பதில் அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெருந்தலைவர் காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசியது உண்மை என்பது போலவும், அதை எதிர்க்கட்சிகள் திரித்து கலகமூட்டுவதுபோலவும் கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.

திமுகவினர் பிரசாரம்

தமிழ்நாடு என்றாலே பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் மட்டுமே நினைவுக்குவர வேண்டும், அவர்கள் மட்டுமே தமிழ்நாட்டிற்காக உழைத்தவர்கள் என்ற பிம்பத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே திமுகவின் திட்டம். அதன் ஒரு பகுதிதான் திருச்சி சிவாவின் பேச்சு. தமிழ்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட, கல்வி, தொழில், நீர்ப்பாசனம் என பல்வேறு துறைகளில் பெரும் புரட்சி செய்த, 'வளர்ச்சி நாயகன்' காமராஜர். அப்படிப்பட்ட பெருந்தலைவர், தனக்கு ஏ.சி. அறை வேண்டும் என்பதற்காக கருணாநிதியிடம் தூது அனுப்பினார் என்பதுபோல திமுகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர். திமுகவின் இந்த சூழ்ச்சியை அறிந்திருந்தும், சில எம்.பி, எம்.எல்.ஏ. பதவிக்காக காமராஜரையை துறக்க, காங்கிரஸ் கட்சியினர் துணிந்து விட்டனர்.

காமராஜர் உயிர் பிரியும் தருவாயில் கூட கருணாநிதி சந்திக்கவில்லை

பெருந்தலைவர் காமராஜர் மறைந்தபோது, அவரது உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய மறுத்தவர் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி. 9 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட பெருந்தலைவர் காமராஜருக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் இல்லை. இதற்கு காரணமானவர்களுடன் இப்போது காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. பெருந்தலைவர் காமராஜர் உயிர் பிரியும் தருவாயில், அவரை கருணாநிதி சந்திக்கவில்லை என்பதை பலரும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், "நீங்கள்தான் நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்" என, காமராஜர் கூறியதாக, திமுகவினர் திரும்பத்திரும்ப பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

திமுக நடத்தும் 'உளவியல் யுத்தம்

1967ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெருந்தலைவர் காமராஜரின் புகழை மறைக்க எவ்வளவோ முயற்சிகளை திமுகவினர் செய்து வருகின்றனர். ஆனாலும் பெருந்தலைவர் காமராஜரை தமிழக மக்களின் மனங்களில் இருந்து அகற்ற முடியவில்லை. அதனால், இப்போது பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு கலங்கும் கற்பிக்கும் வகையில் பல்வேறு அவதூறுகளை பரப்ப துவங்கியுள்ளனர். இது பெருந்தலைவர் காமராஜரை, தமிழக மக்களின் மனங்களில் இருந்து அகற்ற திமுக நடத்தும் 'உளவியல் யுத்தம்'. அதன் ஒரு பகுதியே திருச்சி சிவாவின் பேச்சு. மூதறிஞர் ராஜாஜி மீது அவதூறு பரப்பி, அதில் வெற்றி கண்டவர்கள், இப்போது பெருந்தலைவர் காமராஜரை கையில் எடுத்து இருக்கிறார்கள். ஆனால் பெருந்தலைவர் காமராஜரிடம் திமுக தோற்றுப் போகும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.