திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். சத்தியம் டிவி நடத்திய கருத்துக் கணிப்பில், 58% ஊழியர்கள் யாருக்கு வாக்களிப்பது என முடிவெடுக்கவில்லை.
திமுக தேர்தல் வாக்குறுதியாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று அறிவித்திருந்தனர். இதனை நம்பி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திமுகவிற்கு வாக்களித்தனர். ஆனால் ஆட்சிக்கு நான்கு ஆண்டுகளை கடந்தும் இதுதொடர்பாக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
இவர்களை சமாதானப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தையும், அகவிலைப்படி உயர்வு, சரண் விடுப்பு, உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் தமிழக அரசு ஊழியர்களின் முக்கிய ஓய்வூதிய கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளது. தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த ஒய்வூதிய திட்டமானது 2004-க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பொருந்தும்.
கருத்து கணிப்பு முடிவுகள்
இதனால் அரசு ஊழியர்கள் ஆளும் திமுக அரசு மீது அதிருப்தி இருந்து வருவதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்கு யாருக்கும் விழும் என்பது தொடர்பாக சத்தியம் டிவி நடத்திய கருத்து கணிப்பில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
58 சதவீதம் பேர் முடிவெடுக்கவில்லை
அதாவது 20 சதவீதம் பேர் திமுகவுக்கும், அதிமுகவிற்கு 15 சதவீதமும், தமிழக வெற்றி கழகத்திற்கு 4 சதவீதமும், நாம் தமிழர் கட்சிக்கு 3 சதவீதமும் ஆதரவு தெரிவிக்கின்றனர். மீதும் உள்ள 58 சதவீதம் பேர் அதிருப்தியில் இருப்பதாகவும் முடிவெடுக்கவில்லை என்றும் கூறியுள்ளனர். இந்த 58 சதவீதம் பேரின் வாக்கு யாருக்கு செல்கிறது என்பது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் அரசுக்கு எதிராக பெரிய அலை தற்போது இல்லாவிட்டாலும் அந்த அலை உருவாக ஆரம்பிக்கிறது என்பதை சர்வே முடிவுகள் உணர்த்துகிறது.
