தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளை நடத்துவதையே திமுகவினர் முழு நேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர். தென் மாவட்டங்களில் கனிமக் கொள்ளைக்கு திமுகவைச் சேர்ந்த பெரும்புள்ளி ஒருவர் காட்பாதராக இருக்கிறார். 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் குவாரியில் நடைபெறும் கனிமக்கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி நிறுவன செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை திருவரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பழனியாண்டியின் ஆட்கள் கடத்திச் சென்று கொடூரமாக தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

செய்தியாளர்கள் மீது தாக்குதல்

இந்த நிலையில், கனிமக்கொள்ளையை தட்டிக்கேட்ட செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு காரணமாக இருந்த திமுக எம்.எல்.ஏ பழனியாண்டியை கைது செய்ய வேண்டும் பாமக, பாஜக, தவெக என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''அநீதியையும், கனிமவளக் கொள்ளையையும் அம்பலப்படுத்தியதற்காக செய்தியாளர்களை திமுக சட்டமன்ற உறுப்பினரின் ஆள்கள் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

கனிமக் கொள்ளைக்கு காட்பாதர்

தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளை நடத்துவதையே திமுகவினர் முழு நேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர். தென் மாவட்டங்களில் கனிமக் கொள்ளைக்கு திமுகவைச் சேர்ந்த பெரும்புள்ளி ஒருவர் காட்பாதராக இருப்பதைப் போல திருச்சி, கரூர் மாவட்டங்களில் கனிமக் கொள்ளைக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தான் காட்பாதர் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கனிமக் கொள்ளையில் ஈடுபட்டதற்காக பழனியாண்டிக்கு சொந்தமான குவாரி உள்ளிட்ட 12 குவாரிகளுக்கு ஏற்கனவே ரூ.44.50 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பழனியாண்டி ஒப்புதல் வாக்குமூலம்

பழனியாண்டிக்கு சொந்தமான குவாரியில் இரு ஆண்டுகளுக்கு முன் ஒரு தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதுமட்டுமின்றி, அனுமதிக்கப்பட்ட அளவை விட 20 அடி கூடுதலாக தோண்டியதற்காக எனக்கு ரூ.23 கோடி அபராதம் விதித்துள்ளனர் என்று பழனியாண்டி ஒப்புதல் வாக்குமூலம் அளித்த கொடுமையும் நடந்தது.

அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக கனிமக் கொள்ளையின் உச்சமாக செய்தியாளர்களையே கடத்திச் சென்று தாக்கும் அளவுக்கு பழனியாண்டியின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. இதற்காக அவரையும், அவரது ஆட்களையும் கைது செய்ய வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

அண்ணாமலையும் கண்டனம்

இதேபோல் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ''திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கனிமச் சுரண்டலை கேள்வி கேட்டதற்காக, ஊடகவியலாளர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்த ரவுடிகள், முழுக்க முழுக்க திமுகவின் பாதுகாப்பிலேயே செயல்படுகிறார்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். திமுக அரசு, யாருக்காக ஆட்சி நடத்துகிறது? கடத்தல்காரர்களுக்கும், ரவுடிகளுக்குமா? ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.