தூத்துக்குடி மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கடம்பூர் செ.ராஜூ பேசினார். திமுக ஆட்சியின் மீதான விமர்சனங்களையும், கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 31 மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திமுக ஆடுகிற ஆட்டத்திற்கு அளவே இல்லை

இதில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசுகையில்: அதிமுக பாஜக கூட்டணி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அமைந்திருந்தால் 40க்கு 40 வெற்றி பெற்று இருக்கலாம் என்று எனக்கு முன்பு பேசியவர்கள் சிலர் கூறினர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. திமுக 40க்கு 40 வெற்றி பெற்ற பின்னர் அவங்க ஆடுகிற ஆட்டத்திற்கு அளவே இல்லை. மருத்துவமனையில் ICUக்கு செல்ல வேண்டிய நிலையில் திமுக உள்ளது. நான் வேறு யாரும் மருத்துவமனைக்கு சென்றதை சொல்லவில்லை.

முதல்வர் தன்னிலையில் இல்லை

இந்தியாவை வல்லரசாக உருவாக்கிய ஆற்றல்மிகு பிரதமராக நரேந்திர மோடி இருக்கிறார். அவரது பார்வை தமிழ்நாட்டில் விழுந்திருச்சு. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா இருவரும் நெற்றிக்கண்ணை திறந்து திமுக ஆட்சியை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த நேரத்தில் தான் சரியான நேரத்தில் நல்ல முறையில் கூட்டணி அமைந்திருக்கிறது. திமுகவிற்கு மாற்று அதிமுக தான் மக்கள் கொடுத்த தீர்ப்பு. அதிமுக இன்றைக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்ததோ அன்றைக்கு சட்டமன்றத்தில் முதல்வரின் நிலைமையை பார்த்தேன். தன்னிலையில் அவர் இல்லை.

வரலாற்றுப் பிழையாகி விட்டது

பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டீர்கள் என்று கூறிவிட்டு தற்போது அமைத்து விட்டீர்களே என்று சட்டசபையில் முதல்வர் கேள்வி எழுப்பினர். அவரின் பதற்றத்தை பார்த்தேன். திமுக பொருளாதார வளர்ச்சியாக இருப்பதற்கு பாஜக தான் காரணம். நாங்க தவறு செய்து விட்டோம். 98ல் பாஜகவுடன் கூட்டணி ஆட்சியில் இருந்து விட்டு கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல இடையில் வந்த ஒரு சாமி சுப்பிரமணி சாமி பேச்சைக் கேட்டு ஒரு ஓட்டில் பாஜக வீழ்த்தி வரலாற்றுப் பிழையாகி விட்டது.

திமுகவுக்கு அதிகாரம் கொடுத்தது பாஜக தான் இன்றைக்கு பாஜகவை தீண்ட தகாத கட்சியாக திமுக பார்க்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாமல் நின்றால் ஒரு சீட்டு கூட வெற்றி பெற முடியாது என்பது எங்களுக்கு தெரியும். தெரிந்துதான் தேர்தலை சந்தித்தோம் அது அன்றைய கால சூழ்நிலை. 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

திமுக ஆட்சியை விட்டு இறங்கியதும் வீட்டுக்கு போக மாட்டார்கள். திகார் சிறைக்குத்தான் போவார்கள். மக்கள் தெளிவாகி விட்டனர் திமுக ஆட்சி வீட்டுக்கு போக வேண்டும். அதிமுக பாஜக கூட்டணி வெல்ல வேண்டும். ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் மனதில் வந்துவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவில்பட்டியில் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் புத்தி கூர்மையுடன் திறமையான அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். எடப்பாடி பழனிச்சாமியின் எழுச்சி பயணத்தினால் பிரளயம் வந்தது போல் உள்ளது. திமுகவினால் நிம்மதியா தூங்க முடியவில்லை

இந்நிலையில் தான் திடீரென முதல்வர் உடல்நிலை குறைவு என்று மருத்துவமனைக்கு சென்று விட்டார். தமிழக முதல்வர் பூரண நலம் பெற்று வர வேண்டும் அவர் ஜெயிக்க வேண்டும். ஆனால் அவர் கட்சி தோற்க வேண்டும். உலக நாடுகளின் பார்வையில் இருக்கக்கூடிய ஒரே தலைவர் பிரதமர் நரேந்திர மோடி தான்.

அதிமுக-பாஜக கூட்டணி 200 தொகுதிக்கு மேல் வெல்லும்

அடிக்கடி வெளிநாடு போவதாக பிரதமர் நரேந்திர மோடி மீது சிலர் குறை கூறுகின்றனர். அவருக்கென்ன குடும்பமா இருக்கு வெளிநாடுகளுக்கு சுற்றுலா போக, நாட்டுக்காக அர்ப்பணித்தவர். திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் சந்தித்துக் கொண்ட போது சிரித்த சிரிப்பு தெய்வீக சிரிப்பு. அந்த தெய்வீகச் சிரிப்புக்கு காரணம் 2026ல் தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி 200 தொகுதிக்கு மேல் வெல்லும் என்ற கருத்துக் கணிப்பு வரப் போய்தான். திமுக இன்று வீடு வீடாக சென்று கதவைத் தட்டி ஓரணியில் தமிழ்நாடு என்று உட்கார வைக்கின்றனர். உங்களுடன் ஸ்டாலின் என்று கூறுகிறார். திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது இதனை நாம் வெற்றியாக மாற்ற வேண்டும் என்றார்.