திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தில் வீடுகளுக்குச் சென்று தொந்தரவு செய்வதாகவும், அரசு உதவி நிறுத்தப்படும் என மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது. உயர் நீதிமன்றம் ஓடிபி கேட்க தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தேர்தலை அணுகும் வகையில் `ஓரணியில் தமிழ்நாடு' என்னும் பெயரில் திமுக உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களிடமிருந்து ஆதார் மற்றும் அதன் ஒடிபி எண் ஆகியவற்றை பெற்று வந்தனர். இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தி வருகிறது. இதற்காக திமுகவினர் அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, தொந்தரவு அளித்து வருகின்றனர். மேலும் திமுகவினர் பொதுமக்களிடம் பல்வேறு ஆவணங்களைக் கேட்டு துன்புறுத்துகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

ஆவணங்களை தர மறுத்தபோது, வீட்டுப் பெண்கள் மாதந்தோறும் அரசிடம் பெற்று வரும் ஆயிரம் ரூபாயை நிறுத்தி விடுவதாக மிரட்டினர். மேலும், அனைவரின் தனிப்பட்ட செல்போன் எண்களையும் கேட்கின்றனர். அந்த எண்ணைப் பயன்படுத்தி, திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்கின்றனர். மக்களை திமுகவில் சேர வற்புறுத்தி வருகின்றனர். திமுகவில் சேராமல் போனால் தற்போது பெற்று வரும் அரசு திட்டங்கள் நிறுத்தப்படும் என்கின்றனர். இதனால் மக்கள் பலர் விருப்பமில்லாமல் கட்டாயத்தின் பேரில் தனிப்பட்ட தகவல்களைப் அளிப்பதுடன், திமுகவில் சேருகின்றனர் என தெரிவித்தார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

OTP பெற தடை

இந்த வழக்கு இன்று எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தலாம். ஆனால் ஓடிபி கேட்கக்கூடாது என்று தெரிவித்து ஓரணியில் தமிழ்நாடு பொதுமக்களிடம் OTP பெற தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இதுதொடர்பாக மத்திய அரசு, திமுக பொதுச்செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஓடிபி பெறும் விஷயத்தில் பொதுமக்களிடம் எந்த வற்புறுத்தலையும் தங்கள் கட்சியினர் மேற்கொள்ளவில்லை. எதற்காக ஓடிபி பெறப்படுகின்றது அதை என்ன செய்யவிருக்கிறோம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பொதுமக்களிடம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. மேலும் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தான் மக்கள் தானாகவே இந்த உறுப்பினர் சேர்க்கையில் கலந்து கொண்டு வருகின்றனர். ஆனால் இது எதையும் ஆராயாமல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. எனவே இந்த தடை உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் ஆகஸ்ட் 4ம் தேதி விசாரணைக்கு வருகிறது.