கோவை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அந்த மாணவி மீது திமுக கூட்டணி கட்சி தலைவர் குற்றம்சாட்டியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவையில் தனியார் கல்லூரி மாணவி கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை சீரழித்த 3 கயவர்களை காவல் துறையினர் சுட்டுப்பிடித்தனர். இந்த சம்பவத்தின் மூலம் தமிழகத்தின் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, சீமான் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாணவி மீது குற்றச்சாட்டு

இதில் ஒரு தரப்பினர் கயவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கூறி வரும் நிலையில், ஒரு சிலர் இரவு 11 மணிக்கு மாணவி நண்பருடன் இருட்டான பகுதிக்கு சென்றது ஏன்? என மாணவியை குற்றம்சாட்டி வருகின்றனர். ''ஒரு ஆணும், பெண்ணும் இரவு 11 மணிக்கு மேல் விமான நிலையத்தின் பின்புறம் விளக்கு வெளிச்சம் கூட இல்லாத இடத்தில் இருந்தார்களே அந்த சமூக சீரழிவை எப்படி தடுப்பது?

வளர்க்கிற விதத்தில் இருக்கிறது

அது வளர்க்கிற விதத்தில் இருக்கிறது. ஆகவே சமுதாயத்துக்கு இதில் பெரிய பங்கு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட பங்களிப்பை சமூகம் கொடுக்கும் மூலமாகத்தான் குற்றங்களை குறைக்க முடியும்'' என்று திமுக கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை கண்டனம்

இதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ''திமுகவின் ஊதுகுழலாகவே மாறிவிட்ட ஒருவர், கோவை பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவியின் மீதே பழியைச் சுமத்திப் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. குற்றவாளிகளைப் பற்றி எதுவும் கூறாமல், பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி, முற்றிலும் பிற்போக்குத் தனமான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

கீழ்த்தரமான திமுக அரசு

திமுக ஆட்சியில், குட்டியை வைத்து ஆழம் பார்க்கும் குரங்கு கதையாக, முதலில் தனது ஊதுகுழல்களில் யாரையாவது வைத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் மீது குற்றம் சுமத்திச் செய்தியாக்கி, பின்னர் அந்த வழக்கை அப்படியே நீர்த்துப் போகச் செய்வது வழக்கமாகிவிட்டது. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கிலும், மாணவியின் தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் வெளியிடும் அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொண்டது இந்த திமுக அரசு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

குற்றவாளிகள் தகவல் ஏன் வெளியிடவில்லை?

தவிர, கோவை மாணவி வழக்கில், குற்றவாளிகள் குறித்த மேலதிக தகவல்களை, காவல்துறை இதுவரை ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வி எழுகிறது. வழக்கம்போல, திமுக அரசில் செயலிழந்து நிற்கும் சட்டம் ஒழுங்கை மறைக்க, மடைமாற்றும் முயற்சிகளில் ஒன்றாகவே, திமுக, தனது கூட்டணிக் கட்சியினரை இது போன்று பேசத் தூண்டுவதும் கருதப்படும'' என்று கூறியுள்ளார்.