தருமபுரியில் குடும்பப் பிரச்சினை புகாரளிக்க வந்த பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர், உறவை முறித்துக்கொள்ள முயன்றபோது அப்பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்றார். அப்பெண் பொதுமக்களால் மீட்கப்பட்ட நிலையில், காவல் உதவி ஆய்வாளர் கைது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள பூகானஅள்ளி கிராமத்தை சேர்ந்த கோமதி (28). தனது கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை குறித்து கணவர் மீது பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் செய்தார். அப்போது பணியிலிருந்த தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ராஜாராம் அந்த பெண்ணிடம் ஆறுதலாக பேசியதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து அதியமான்கோட்டை அருகே ஒட்டப்பட்டியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்க வைத்து கணவன் மனைவி போல் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் அவரது மனைவிக்கு தெரிந்து தகராறு செய்ததை அடுத்து கடந்த 3 மாதங்களாக ராஜாராம் கோமதியுடன் தொடர்பை நிறுத்தியுள்ளார்.

இதுபற்றி கோமதி ராஜாராமை சந்தித்து கேட்டதால் கடந்த 21ம்தேதி இரவு பெருமாள் கோயில் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து ஊற்றினால் பிரச்னை சரியாகும் என்று நைசாக பேசி அழைத்து சென்று கிணற்றுக்குள் தள்ளி விட்டு தப்பியுள்ளார். இதனையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அவரை மீட்டனர்.

பின்னர் கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்றதாக கோமதி கொடுத்த புகாரில் ராஜாராம் மீது வழக்கு பதிவு செய்த அதியமான் கோட்டை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், எஸ்எஸ்ஐ ராஜாராமை சஸ்பெண்ட் செய்து தர்மபுரி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார். கள்ளக்காதல் விவகாரத்தில் காவலர் பெண்ணை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.