ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கட்சி தலைமை தொடர்பான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கு காவல்துறை தடை தொடர்பாக தகவல் வெளியான நிலையில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கட்சியின் தலைமை மற்றும் நிர்வாகம் தொடர்பாக மோதலானது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த நாடளுமன்ற தேர்தலின் போதே இருவருக்கும் இடையேயான மோதல் வெளியே தெரிய தொடங்கியது. கூட்டணி தொடர்பாக அன்புமணி பாஜகவிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ராமதாஸ் அதிமுகவுடன் நடத்தினார். இறுதியில் பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது. அடுத்ததாக புதுச்சேரியில் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், ராமதாஸ் தனது மகள் வழி பேரன் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக நியமித்தார். இதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்து, முகுந்தனுக்கு போதிய அனுபவம் இல்லை என்று வாதிட்டார். இது இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதமாக மாறியது, தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இரு தரப்பிற்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்த போதும் ராமதாஸ், அன்புமணியை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அவரை செயல் தலைவராக இறக்கம் செய்தார். இதற்கு பதிலளித்த அன்புமணி, தான் முறைப்படி பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்றும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர் என்றும் பதிலடி கொடுத்தார். ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதரவு நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் கட்சி இரண்டாக உடைந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் தனது செல்வாக்கு நிரூபிக்கும் வகையில் அன்புமணி, ஜூலை 25, 2025 முதல் மக்கள் உரிமை மீட்பு பயணத்தை அறிவித்தார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ், அன்புமணி நடை பயணத்தால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் எனக் கூறி காவல்துறையிடம் புகார் அளித்தார். மேலும் அன்புமணி நடை பயணத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என கேட்டுக்கொண்டார்.
தமிழக டிஜிபி, அன்புமணியின் நடைபயணத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் வாய்ப்புள்ளதால் இந்த நடைபயணத்திற்கு அனுமதி வழங்க வேண்டாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவு பாமகவினருக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில் அன்புமணி நடைபயணத்திற்கு தடை விதிக்கவில்லை எனவும் அந்தந்த காவல் ஆணையர் மற்றும் எஸ்பிக்கள் மனுக்களை பெற்று பரிசீலனை செய்து அனுமதி கொடுக்குமாறு டிஜிபி சுற்றறிக்கை கொடுத்துள்ளதாக தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
