சாப்ட்வேரில் மாற்றம் செய்யப்பட இருப்பதால் டிஜிட்டல் ஆக்கப்படாத ஆவணங்களின் வில்லங்க சான்றிதழ்களை ஜனவரி 2ம் தேதி முதல் பெறலாம். அதுவரை வில்லங்க சான்றிதழ் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. திருமணம், சீட்டு மற்றும் சங்கங்கள் இதன் மூலம் பதிவு செய்யப்படுகிறது.

ஆவணங்களின் வில்லங்கத்தன்மையை ஆன்லைனில் பெறும் வசதியை முதல்வர் பழனிசாமி டிசம்பர் 10ம் தேதி துவக்கி வைத்தார். இதன் மூலம் பொதுமக்கள் வில்லங்க சான்று கேட்டு சார்பதிவாளர்கள் அலுவலகத்துக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

வில்லங்க சான்றிற்கு ஆன்லைனில் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதும். இதையடுத்து கேட்கப்படும் ஆண்டுகளுக்கு வில்லங்க சான்று வழங்கப்படுகிறது. இதற்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கும் வகையில் சான்றில் கியூஆர் குறியீடு வழங்கப்படுகிறது.

இதனால் வங்கி உள்பட அனைத்து இடங்களுக்கும் இந்த அந்த கியூஆர் குறியீடை காட்டினால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பழமையான ஆவணங்கள் அதாவது 35 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்களை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதனால், அந்த ஆவணங்களை சார்பதிவாளர் அலுவலகங்களில் நேரில் பெற வேண்டிய நிலை தான் உள்ளது. இந்த நிலையில், அந்த ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடப்பதால் வரும் 31ம் தேதி வில்லங்கசான்று கேட்டு ஆன்லைனில் பதிவு செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 2ம் தேதி முதல் இந்த திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.