2026 சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிடவும், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் கூட்டணி கட்சிகள் : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த நிலையில் கூட்டணி தொடர்பாகவும், தொகுதி பங்கீடு தொடர்பாகவும் திரைமறைவில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஊஊன் 11 முதல் 20 வரை பிரச்சார இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடங்கவுள்ளது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிக்கையான தீக்கதிருக்கு அக்கட்சி மாநில செயலாளர் சண்முகம் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. மேலும் வலுவடைய என்ன செய வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர்,
கூட்டணி கட்சிகளை மதிக்கும் திமுக
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளை அரவணைத்துச் செல்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறேன். தற்போதும் நீடித்து வரும் ஒற்றுமையை, மேலும் கட்டிக் காப்பாற்றுவதன் மிக அதிக அவசியம் உள்ளது. அதற்கான முறையில் திமுகவின் அணுகுமுறை இருக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளை மதிப்பதில் திமுகவை இன்றைக்கும் எந்தக் குறையும் சொல்ல முடியாது. இதே நிலை தொடர வேண்டும்.
கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டது. அன்றைய சூழ்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி எந்த நிலையிலும் வெற்றிபெற்றுவிடக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் திமுக ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அது மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது கிடையாது. இதுதான் கட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக மிகமிகக் குறைந்த தொகுதியில் ஒப்பந்தம் செய்துகொண்டு போட்டியிட்டது.
சிபிஎம் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்
அத்தகைய அணுகுமுறை இந்த தேர்தலில் தொடரக்கூடாது. ஏனென்றால், தமிழ்நாட்டு மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் அது நிச்சயமாக நல்லதாக இருக்காது. ஆகவே, விட்டுக்கொடுப்பது திமுக தலைமைக்கு பயனுள்ளதாக இருக்கும். 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதும், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க வேண்டும் என்பதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு தீர்மான மாகும்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருப்பதால், கடந்த தேர்த லின்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி களை திமுக அரசாங்கம் மேலும் நிறைவேற்ற வேண்டும். தொழிலாளர், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு ஆதரவான நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமாக அதிமுக-பாஜக கூட்டணியை முழுமை யாக முறியடித்து திமுக தலைமையிலான மதச் சார்பற்ற அணி அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என தெரிவித்தார்.
