டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி டிஐஜி வருண்குமார் இடையேயான வார்த்தைப் போர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருவரும் ஒருவர் மாறி ஒருவர் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை வாரி தெளித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய டிஐஜி வருண்குமார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை பற்றி எந்தவித ஆதாரமும் இல்லாமல் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பரப்பி வருகிறார்.
தனக்கு எதிராக பொதுவெளியில் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பரப்பி வருவதால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்தால் எதிர்காலத்தில் தனக்கு எதிரான ஆதாரமில்லாத அவதூறு கருத்துகளை தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் அவதூறு கருத்துகளை தெரிவித்த சீமான் ரூ.2 கோடியே 10 லட்சம் மான நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற விலையில், டிஐஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை பரப்புவதற்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மனு தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.
