அவனை யாராலும் காப்பாத்த முடியாது! சீமானைச் சீண்டும் வருண்குமார் ஐபிஎஸ்!
சீமான் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. வருண்குமார் சமீபத்தில் திருச்சி சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்நிலையில், சீமானை குறிப்பிட்டு 'வேட்டையன்' பட வசனத்தை வருண்குமார் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீமான் வருண்குமார் இடையேயான மோதல் இவ்வாறு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில், ஞாயிறு அன்று தமிழக அரசு 56 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. திருச்சி மாவட்ட எஸ்பியாக இருந்த வருண்குமார் ஐபிஎஸ் திருச்சி சரக டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில், பதவி உயர்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்த 'வேட்டையன்' படத்தின் பின்னணி இசையுடன் "எங்கிட்ட இருந்து அவனை யாராலும் காப்பாத்த முடியாது" என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்த பலர், சீமான் தன்னிடம் இருந்து தப்பிக்க முடியாது என்று வருண்குமார் சொல்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை வழக்கு: எஃப்.ஐ.ஆர் கசிவுக்கு என்ன காரணம்?
சீமான் vs வருண்குமார்:
முன்னதாக, சீமானும் அவரது கட்சியினரும் தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றியும் அவதூறு பரப்புவதாக ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கு விசாரணையில் வருண்குமார் ஐபிஎஸ் நேரில் ஆஜரானார்.
சில மாதங்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டபோது, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது தான் சித்திரவதை செய்யப்பட்டதாக துரைமுருகன் குற்றம்சாட்டினார். பதிலுக்கு, சீமான் துரைமுருகனுடன் பேசும்போது, காளியம்மாள், நத்தம் சிவசங்கரன் போன்ற கட்சியின் நிர்வாகிகள் குறித்து அவதூறாக பேசினார் என்றும் சில ஆடியோக்கள் பரவின.
திருச்சி எஸ்பி வருண்குமார் தான் சாட்டை துரைமுருகனின் போனில் பதிவான ஆடியோக்களை கசியவிட்டதாக சீமான் கூறினார். திருச்சி எஸ்பி வருண்குமார், சாட்டை துரைமுருகனை கைது செய்து பழிவாங்குவதாகவும் சீமான் சாடினார்.
வருண்குமார் சாதி வன்மத்துடன் செயல்படுவதாக சீமான் மீண்டும் குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து, வருண்குமார், மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஆகியோரை சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியினர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
2025 ஜனவரி 1 முதல் பிறக்கப்போகும் பீட்டா தலைமுறை! ரெடியாக இருக்கும் சவால்கள்!