தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் தொடர்கிறது. கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் சுதந்திர தின விழா தேநீர்புறக்கணிக்கின்றன.

Tamil Nadu Governor tea party : தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையேயான மோதல் பல ஆண்டுகளாக தொடர்கிறது. குறிப்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் ஆளுநர் ரவி கிடப்பில் போட்டதாக தமிழக அரசு விமர்சித்து வருகிறது. இதனையடுத்து உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு, 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிட்டது. ஆனால், ஆளுநர் சில மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது மற்றும் தாமதப்படுத்துவது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தாமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.

ஆளுநர் தமிழக அரசு மோதல்

இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ரவிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் அந்த மசோதா மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக திமுக குற்றம்சாட்டியது. இதனையடுத்து தற்போது அந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் ரவி அனுப்பிவைத்துள்ளார். இந்த நிலையில் நாளை மறுதினம் சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், அதனை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளது.

ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களுக்கும், மண்ணின் உரிமைக்கும் பதவியேற்றக் காலத்திலிருந்தே எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் தூண்டுதலின் பேரில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை ஏற்படுத்தும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும்,

 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை வேண்டுமென்றே காலம்தாழ்த்தி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதைக் கண்டித்தும், சுதந்திர தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.