ஆற்காடு மகாலட்சுமி கலைக் கல்லூரி மாணவி கிருத்திகா காதலை மறுத்ததால் கவியரசு என்பவரால் கத்தியால் வெட்டப்பட்டார். கலவை அருகே நடந்த இந்த சம்பவத்தில் கிருத்திகாவுக்கு கழுத்து மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. கவியரசு கைது செய்யப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மேல்நேத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல். விவசாயி. இவரது மகள் கிருத்திகா(19). இவர் ஆற்காடு மகாலட்சுமி கலை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டு கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கி மேல்நேத்தப்பாக்கம் கூட்ரோட்டில் இருந்து நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் நடுரோட்டில் கிருத்திகாவிடம் தகராறில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்து, இடது கை பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பித்தார்.

இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த கிருத்திகா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கலவை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீஸ் விசாரணையில் கல்லூரி மாணவியை கத்தியால் வெட்டியது அகரம்பாளையத்தை சேர்ந்த கவி என்ற கவியரசு என்பதும் நான் எங்கு சென்றாலும் தொடர்ந்து என்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தியதாக தெரியவந்துள்ளது. காதலை ஏற்க மறுத்ததால் கத்தியால் வெட்டியது தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவியை கத்தியால் வெட்டிவிட்டு தப்பித்த கவியரசை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கவியரசு மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.