Asianet News TamilAsianet News Tamil

வேலை இழந்த ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு; இணையதளம் வெளியிட்டார் ஆட்சியர்...

Collector introduced job website for lost job in Sterlite plant
Collector introduced job website for lost job in Sterlite plant
Author
First Published Jul 7, 2018, 6:25 AM IST


தூத்துக்குடி
 
வேலை இழந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவதற்காக இணையதளத்தை வெளியிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்த ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன் முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி, "தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு கடந்த மே மாதம் 22–ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது. 

மாவட்ட அளவிலான அலுவலர்கள் தலைமையில், ஆலையில் உள்ள கந்தக அமிலம் உள்ளிட்ட பொருட்கள் டேங்கர் லாரிகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இந்த பணிகளை ஒரு மாத காலத்திற்குள் அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் பணியாற்றி வந்த அலுவலர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் www.thoothukudi.online என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. 

இதில் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் வேலைபார்த்து, தற்போது வேலை வாய்ப்பற்ற ஊழியர்கள், அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்கள் சுய விவரங்களை பதிவேற்றம் செய்யலாம். 

மேலும், தனியார் நிறுவனத்தினரும், இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பயோ டேட்டாவை பார்த்து தகுதி மற்றும் காலிப் பணியிடத்துக்கு ஏற்ப தேர்வு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த இணையதளத்தின் வாயிலாக பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலுவலர்கள், ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்கள் தங்களது பயோ டேட்டாவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்" என்று அவர் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios