உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில் அரசு முத்திரையுடன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட விளம்பரத்தில் அரசு முத்திரை இடம்பெற்றுள்ள நிலையில், அதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படமும், மு.க.ஸ்டாலினின் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. அரசின் திட்டத்தை ஒரு தனி மனித சாதனை போல விளம்பரப்படுத்துவது தவறானது.

சி.வி.சண்முகம் தரப்பில் மனு

இந்த திட்டம் முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது. அரசு பணத்தை அரசியல் காரணங்களுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில் சொல்லப்பட்டிருக்கும் தகவலுக்கும், கருணாநிதி புகைப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால், கருணாநிதியின் புகைப்படத்தை பயன்படுத்துவது வழிமுறைகளுக்கு எதிரானது. 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தன்னார்வலர்கள் மூலமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும், திமுகவினர் தான் இந்த திட்டத்தில் அதிகளவில் இருப்பதாக அவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த தடை

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முதலமைச்சர் புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கட்சியினுடைய கொள்கை தலைவர்களின் புகைப்படங்களையோ, முன்னாள் முதல்வர் புகைப்படத்தையோ பயன்படுத்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. அரசு திட்டத்தின் பெயரில் அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என பரபரப்பு தீர்ப்பு வழங்கினர்.

சி.வி.சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபாரதம்

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக்கோரி மேல்முறையீடு செய்தது. இந்த மனுவானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய், நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக தெரிவித்த நீதிபதிகள் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த தடையில்லை என்றனர். மேலும், குறிப்பிட்ட கட்சியை மட்டும் எதிர்த்து மனுவை போட்டதை நாங்கள் ஏற்கவில்லை. அனைத்து கட்சிகளுமே இதுபோன்ற விவகாரத்தில் ஈடுபடுவதை மனுதாரர் எதிர்க்க வேண்டும். மனுத்தாக்கல் செய்ததில் உள்நோக்கம் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. அரசியல் சண்டைகள் என்பது நீதிமன்றங்களில் இருக்கக்கூடாது என்ற நீதிபதிகள் மனுத்தாக்கல் செய்த சி.வி.சண்முகம் தரப்பிற்கு ரூ.10 லட்சம் அபாரதம் விதித்து உத்தரவிட்டனர்.