திருச்சியில் உருவாக்கப்பட்டு வரும் பெரியார் உலகத்திற்கு நிதியுதவி செய்யும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியம், திமுக எம்.பி.கள், எம்எல்ஏ.களின் ஊதியத்தையும் வழங்கினார்.
செங்கல்பட்டு மறைமலை நகர் பகுதியில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கலைஞர், பேராசிரியருக்கு பிறகு என்னை வழிநடத்துபவர் கி.வீரமணி. திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது சல்யூட். திராவிடர் கழகத்திற்கு எதிராக தொடங்கப்பட்டது கிடையாது திமுக. திராவிடர் கழகத்தின் நீட்சியே திமுக. 92 வயதிலும் இளைஞர் போன்று வீரமணி ஊர் ஊராக சுறுசுறுப்பாக செயல்படுகிறார்.
பெரியாரின் சிந்தனைகளை அவர் வாழும் காலத்திலேயே நிறைவேற்றிய இயக்கம் திமுக. திருச்சியில் உருவாகும் பெரியார் உலகத்துக்கு திமுக.வால் நிதி வழங்காமல் இருக்க முடியுமா? பெரியார் உலகத்திற்கு எனது ஒருமாத ஊதியத்தை கொடுக்க முடிவெடுத்தேன். மேலும் திமுக எம்.பி.கள், எம்எல்ஏ.களின் ஒரு மாத ஊதியமாக சுமார் ரூ.1.5 கோடியை வழங்குகிறோம்.
என்னைப் பற்றி பல வதந்திகளைப் பரப்ப முயற்சித்தனர். தற்போதும் பரப்பி வருகின்றனர். இதுபோன்ற அவதூறுகளை நான் எப்பொழுதும் போல செயல்களால் பதிலடி கொடுத்து வருகிறேன். நம் இனத்தில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உருவாவது சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்களுக்கு தமிழும் பிடிக்காது, தமிழர்களும் பிடிக்காது. மேலும் நாம் தலைநிமிர்வதும் சிலருக்கு பிடிக்காது” என்று தெரிவித்துள்ளார்.
