தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் 3,400 லிட்டரில் இருந்து 3, 700 லிட்டராக அதிகரித்து வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  

மீனவர்கள் மாநாட்டில் முதலமைச்சர்

தமிழக முதலமைச்சர் மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளவர், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்களை சந்தித்து பேசினார். இதனையடுத்து இன்று காலை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்திற்கு சென்ற அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ராமநாதபுரத்தில் நடைபெறும் மீனவர் நல மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது மீனவர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். கச்சத்தீவை திமுக அரசு தாரை வார்த்துவிட்டதாக வரலாறு தெரியாமல் உளறுவதாக கூறியவர், கலைஞர் கருணாநிதியின் எதிர்ப்பை மீறிதான் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

மானிய மண்ணெண்ணெய் உயர்வு

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க, போடப்பட்டது ஒப்பந்தம் மட்டுமே, சட்டம் இல்லை இல்லையென்றும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மீனவர்களுக்கான அறிவிப்பையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன் படி, மீனவர்களுக்கான வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 5,035 மீனவர்களுக்கு பட்டா வழங்கப்படும். மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சாத்தியம் உள்ள இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும். 45,000 மீனவர்களுக்கு கூட்டுறவு கடன் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் 3,400 லிட்டரில் இருந்து 3, 700 லிட்டராக அதிகரித்து வழங்கப்படும் என தெரிவித்தவர்,

மீன் பிடி தடைகால நிவாரணம் உயர்வு

விசைப்படகுகளுக்கு மானிய டீசல் 18,000ல் இருந்து 19,000 லிட்டராக அதிகரித்து வழங்கப்படும் எனவும், நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய டீசல் 4,000ல் இருந்து 4,400 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணம் 5ஆயிரத்தில் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். 

இதையும் படியுங்கள்

கச்சத்தீவை திமுக அரசு தாரை வார்த்துவிட்டதாக வரலாறு தெரியாமல் உளறுகிறார்கள்.! பாஜகவை விளாசும் ஸ்டாலின்