தற்போது மாம்பழ சீசன் என்பதால் தமிழகத்தில் மாம்பழ விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சேலம் மாம்பழத்திற்கு அதிக கிராக்கி உள்ளது. ஆகவே அங்கிருந்து மாநிலத்தின் பிறபகுதிகளுக்கு மாம்பபழங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் ரசாயனக் கற்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த வகை ரசாயனக் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் உடனடியாக பழுப்பதோடு, நல்ல நிறத்துடன் காட்சியளிக்கும். ஆகவே வியாபாரிகள் சிலர் இவற்றை நாடுகிறார்கள்.

ரசாயனக் கற்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள், உடல் நலத்திற்கு தீங்கு என்பதோடு, உடல் உறுப்பு சார்ந்த நோய்களை உருவாக்குகின்றன. புற்றுநோய் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆகவே இவ்வாறு ரசாயனக் கற்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை அதிகாரிகள் சோதனை செய்து பறிமுதல் செய்து வருகிறார்கள். 

இந்நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, ரசாயனக் கற்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட இரண்டரை டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.