Asianet News TamilAsianet News Tamil

அமராவதியில் மட்டும் 10 இடங்களில் தடுப்பணைகளை கட்டினால்தான் எதிர்கால வறட்சியைச் சமாளிக்க முடியும் – விவசாயிகள் ஆதங்கம்…

can be prevented from drought only build 10 dams in Amaravati - farmers
can be prevented from drought only build 10 dams in Amaravati - farmers
Author
First Published Oct 16, 2017, 7:04 AM IST


கரூர்

அமராவதியில் கரூர் மாவட்டத்திற்குள் 10 இடங்களில் தடுப்பணைகளை கட்டினால் மட்டுமே எதிர்கால வறட்சியைச் சமாளிக்க முடியும் என்று விவசாயிகள் ஆதங்கத்தோடு தெரிவித்தார்.

அமராவதி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் நீரை சேமிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சங்க காலத்தில் “ஆம்பிராவதி” என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் மருவி அமராவதியாக மாறியுள்ளது. இங்கு கடந்த நான்கு வருடங்களாக தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டதால் அமராவதி நதியின் பழைய ஆயக்கட்டுப்பாசனப் பகுதியான கரூர் மாவட்டத்தில் சுமார் 32 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியின்றி வாடின.

இதனால், விவசாயம் பொய்த்துப்போய் கால்நடைகளுக்கு கூட தீவனம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. மேலும், விவசாயிகள் தங்களது கால்நடைகளை அடிமாட்டுக்கு விற்கும் நிலையும் உருவானது.

தற்போது இந்த வருடம் தென்மேற்குப் பருவமழை ஓரளவு கை கொடுத்திருந்த நிலையில் வடகிழக்குப் பருவமழையும் நல்ல தொடர்மழையுடன் பெய்யத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் சில மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடும் அளவிற்கு நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் எப்போதும் வறண்டு காணப்படும் அமராவதி நதியில் கடந்த மாதம் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் சனிக்கிழமையும் ஆற்றில் திடீரென தண்ணீரின் வருகை அதிகரித்தது.

இதுதொடர்பாக அமராவதி வடிநில கோட்ட பொறியாளரிடம் கேட்டபோது, “அமராவதி அணையில் இருந்து ஏற்கெனவே கடந்த 1-ஆம் தேதி குடிநீருக்காக 800 கனஅடி திறந்தோம்.
பின்னர் அணையில் நீரின் வரத்து குறைந்ததையடுத்து நிறுத்தினோம். தற்போது கடந்த 10-ஆம் தேதி முதல் மீண்டும் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆற்றின் துணை நதிகளான நங்காஞ்சி மற்றும் குடகனாறுகளின் நீர்பிடிப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை பெய்த பலத்த மழை காரணமாக அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது” என்றுத் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட நிலத்தடி நீர் மற்றும் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தினர், “அமராவதி ஆற்றில் தற்போது கரைபுரண்டு ஓடும் நீரைச் சேமிக்க ஆற்றின் பல இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும்.

அமராவதியை பொறுத்தவரை காவிரியைப் போன்று திருப்பூர் மாவட்டத்திடம் இருந்து கரூர் மாவட்ட விவசாயிகள் கையேந்தும் நிலை உள்ளது. மழை பெய்யும்போது சேமித்தால்தான் வரும்காலங்களில் கடந்த நான்கு வருடங்களில் விவசாயிகள் அனுபவித்த வேதனையை தடுக்கலாம்.

கடந்த 4-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் காவிரி ஆற்றில் புகழூர் பகுதியில் தடுப்பணை அமைக்கக் கோரினர். ஆனால், அடிக்கடி வறண்டு போகும் அமராவதி ஆற்றில் தண்ணீரை சேமிக்க யாரும் தடுப்பணை கேட்கவில்லை.

இனியாவது விழித்துக்கொண்டு அமாரவதியில் கரூர் மாவட்டத்திற்குள் 10 இடங்களில் தடுப்பணை கட்டினால் மட்டுமே எதிர்கால வறட்சியை சமாளிக்க முடியும்” என்றுத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios