முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மே தின வாழ்த்து!

உலகம் முழுவதும் நாளை சர்வதேச உழைப்பாளர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Labor day TN CM MK Stalin May Day Wishes smp

உழைக்கும் தொழிலாளர் குடும்பங்கள் கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்ந்து உன்னத நிலை பெற நெஞ்சார வாழ்த்துகிறேன் என முதல்வர் ஸ்டாலின் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “‘காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்’ - என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொழிலாளர்களின் தியாக உழைப்பைப் போற்றிப் பாடுவார். தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்தில் பல மணி நேரம் வேலை செய்திட வாட்டி வதைக்கப்பட்ட தொழிலாளர் சமுதாயம் எட்டு மணி நேர வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி இரத்தம் சிந்திப் போராடி, உயிர்ப் பலி தந்து தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள் தான் மே நாள்!  திராவிட முன்னேற்றக் கழகம், தொழிலாளர்களை உயிராக மதிக்கும் இயக்கம்.  தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலாளர்களின் நலம்நாடிப் பல்வேறு  திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.

1969இல் முதலமைச்சராகப்  பொறுப்பேற்ற முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் அமைந்த திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் தொழிலாளர் நலனில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக   தனியே தொழிலாளர் நலத் துறையையும்,  தொழிலாளர் நல அமைச்சகத்தையும் ஏற்படுத்தியது.

1969-ஆம் ஆண்டில்  மே முதல் நாளை ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை நாளாக அறிவித்துச் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தப்பட்டது. 1969-இல் கணபதியாபிள்ளை ஆணையப் பரிந்துரையை ஏற்று, அவசரச் சட்டம் பிறப்பித்து விவசாயத் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்கப்பட்டது.

பீடித் தொழில், பனியன் நெசவு,  தோல் பதனிடும் தொழில்,  எண்ணெய் ஆலைகள், செங்கல் சூளை,  உப்பளம்  முதலியவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத்  தொழிற்சங்கப் பலம் இல்லாமையால் போதிய ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்பட்டு வந்த நிலைகண்டு  அத்தொழிலாளர்களுக்குத்  தொழில் முகவர்களிடம் பேசி அவர்களுக்கெல்லாம் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கச் செய்தது தி.மு.க. ஆட்சி.

1971-இல் “குடியிருப்பு அனுபோகதாரர்கள் சட்டம்” த்தின்படி 1,73,748 விவசாயத்தொழிளர்களுக்கு அவர்கள் குடியிருக்கும் வீட்டு மனையை அவர்களுக்கே சொந்தமாக்கியது; 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வந்து; கிடைத்த உபரி நிலங்களை இலட்சக்கணக்கான ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்க வழிவகை செய்தது; தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல்,” பணிக்கொடை” வழங்கும் திட்டம் கண்டது; விபத்துகளால்  பாதிக்கப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பதற்காகத் தொழில் விபத்து நிவாரண நிதி திட்டம் உருவாக்கியது; 1990-ல் கையினால் செய்யப்படும் தீப்பெட்டி மீதான 8 சதவீத விற்பனை வரியை ரத்து செய்து இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தடுத்தது;

மே தின நூற்றாண்டு விழாவினையொட்டி 1990-இல் சென்னை நேப்பியர் பூங்காவிற்கு “மே தினப் பூங்கா” எனப் பெயர் சூட்டி, அங்கு மே தின நினைவுச் சின்னத்தை அமைத்தது; முதலான பல்வேறு  தொழிலாளர் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல்  தொழிலாளர்களின் தோழனாக   பல்வேறு புதிய திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றி வருகிறோம். 18 அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற 16 இலட்சத்து 72 ஆயிரத்து 785 உறுப்பினர்களுக்கு 1,304 கோடியே 55 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய்  மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மோடியையும், ராகுல் காந்தியையும் ஒப்பிட முடியாது: அஜித் பவார்!

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் மட்டும் 19 ஆயிரத்து 576 தொழிலாளர்களுக்கு  11 கோடியே  28 இலட்ச ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 44 தொழில்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 3 புதிய தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்  நிர்ணயம் செய்யப்பட்டு பல்வேறு தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த அரசினால் பயனடைந்து வருகின்றனர். உப்பு உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் மற்றும் இணையவழி தற்சார்புத் (Gig Workers) தொழிலில் ஈடுபடும் உடலுழைப்புத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர்கள் நல வாரியமும், தமிழ்நாடு இணையவழி தற்சார்புத் (Gig Workers) தொழிலாளர்கள் நலவாரியமும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.1,000/- என்பது ரூ.1,200/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலக வளாக கட்டடம் கட்டப்பட்டு  10-7-2023 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் நிறுவனங்களில் அனைத்துப் பணியாளர்களும் அமர்வதற்கு, அவர்கள் பணிபுரியும் இடங்களில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தித் தருதல் மற்றும் பணியாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பான குடிநீர், கழிப்பிடம், ஓய்வு அறை மற்றும் உணவருந்தும் அறை மற்றும் முதலுதவி வசதிகள் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் 1947 ஆம் ஆண்டைய தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு தொழிலாளர் நலன்கள் இந்த அரசினால் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இப்படி, தொழிலாளர்கள் நலனில் முழு அக்கறை செலுத்தி தொழிலாளர்களையும், அவர்களின் குடும்பங்களையும் காத்து வரும் திராவிட மாடல் அரசின் சார்பில் தொழிலாளர் சமுதாயம் நல வாழ்விலும், பொருளாதார மேம்பாட்டிலும் முன்னேற்றங்கள் பல கண்டு உயர்ந்திட என் நெஞ்சம் நிறைந்த “மே” தின நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில்   மகிழ்ச்சி அடைகிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios