கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய்த் தொற்று பரவி வரும் நிலையில், தமிழகத்தில் சுகாதாரத்துறை முக்கிய உத்தரவிட்டுள்ளது.

Brain Eating Amoeba & Fever Alert in Chennai! நமது அண்டை மாநிலமான கேரளாவில் 'அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்' என்றழைக்கப்படும் மூளையை தின்னும் அமீபா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டு கேரளாவில் இதுவரை 42 பேருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அசுத்தமான, தேங்கி நிற்கும் நன்னீரில் வாழும் அமீபா, ஏரிகள், குளங்கள், ஆறுகள் மற்றும் சரியாக பராமரிக்கப்படாத நீச்சல் குளங்களில் குளிக்கும்போது மூக்கு வழியாக உடலுக்குள் புகுந்து விடுகிறது.

மூளையை தின்னும் அமீபா நோய்த் தொற்று

பின்பு மூளை திசுக்களை அழித்து, கடுமையான மூளை வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனைத் தொடர்ந்து கடுமையான தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி, கழுத்து விறைப்பு ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டு நோய் தீவிரமடையும்போது கோமா, வலிப்பு போன்றவை ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த நோய் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தும் நிலையில், இது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது என்பது ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.

சென்னையில் பரவும் காய்ச்சல்

தமிழகத்தில் மூளையை தின்னும் அமீபா நோய்த் தொற்று இதுவரை கண்டறிப்படவில்லை என்றாலும், சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவி வருது மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஹோட்டல்களில் உள்ள நீச்சல் குளங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், ''தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் நட்சத்திர ஹோட்டல் நீச்சல் குளங்களில் நாளொன்றுக்கு இரு முறை தண்ணீர் வெளியேற்றி விட்டு குளோரின் பவுடர், தெளித்து சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதை அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களும் பின்பற்றுகிறார்களா? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்

மாசுபட்ட நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம்

மாசுபட்ட நீர் நிலைகளில் குழந்தைகள் குளிக்காமல் பெற்றோர்கள் பாதுகாக்க வேண்டும். அமீபா என்பது மாசுபட்ட மற்றும் மாசடைந்த நீர் நிலைகளில் இருந்து உருவாகக்கூடிய ஒரு தொற்று. தலைவலி, காய்ச்சல் உள்ளிட்டவை இந்த தொற்றின் அறிகுறிகளாக உள்ளது. அதன் பிறகு மூளை பாதிக்கப்படும். மூளைத் தின்னும் அமீபா தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. எனவே பொதுமக்கள் தேவையின்றி பீதி அடைய வேண்டாம்'' என்று கூறப்பட்டுள்ளது.