கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 வயது சிறுவன் ரோகித் காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகள் மூலம் சிறுவன் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்த நிலையில், மாதையன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Krishnagiri 13 year old boy kidnapped : கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்துள்ள மாவநட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ்–மஞ்சு தம்பதியினரின் 13வயது மகன் ரோகித், 02.07.2025 அன்று மாலை தனது நண்பர்களோடு விளையாட சென்றவன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் உறவினர்கள் அருகில் உள்ள பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதனைடுத்து போலீசாரிடம் சிறுவனின் தந்தை சிவராஜ் புகாள் அளிக்க சென்ற நிலையில், உரிய வகையில் புகாரை எடுக்காமல் உன் மகனை யார் கடத்த போகிறார்கள்.? 3 கோடி கேட்கவா போகிறார்கள் என உதாசனப்படுத்தியுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த சிவராஜ் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எந்த வித தகவலும் கிடைக்காத காரணத்தால் அடுத்த நாள் காலையில் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் போன சிறுவன்- போலீசார் அலட்சியம்

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் மாவட்ட எஸ்பி, டிஎஸ்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்போது சிறுவனை விரைவில் கண்டுபிடிப்போம் என போலீசார் உறுதி அளித்துள்ளனர். இதனிடையே அஞ்செட்டியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள வனப்பகுதியில் சிறுவன் ரோகித் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். அச்சிறுவனை மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது சிசிடிவி காட்சிகள் மூலமாக தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த மாதையன் என்பவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக கைது செய்து விசாரணை நடத்திய போது தனது நண்பனான மற்றொரு மாதையன் என்பவனோடு சேர்ந்து சிறுவனை தனியாக அழைத்து சென்று வாயில் பீர் ஊற்றி மயக்கம் அடைய செய்து பள்ளத்தில் தூக்கி வீசியதாக தெரிவித்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

சிறுவனை கொலை செய்தது ஏன் என போலீசார் விசாரணையில் மாதையன் கூறுகையில், தனது காதலியோடு தான் தனிமையில் இருந்ததை சிறுவன் ரோகித் பார்த்துவிட்டான். இதனை ஊரில் உள்ளவர்களிடம் தெரிவித்து விடுவான் என்ற அச்சத்தால் சிறுவனை கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏ வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரோகித்தின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அஞ்சட்டி காவல் நிலையத்தில் நேற்று இரவே புகார் அளித்த நிலையில், உடனே காவல்துறை விசாரணையை தொடங்கியிருந்தால், அச்சிறுவனை காப்பாற்றி இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும்.

சிறுவனை கொலை செய்தது ஏன்.?

ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் காவல்துறை மெத்தனப் போக்கில் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. காவல்துறையின் இத்தகைய அலட்சியம், தமிழ்நாடு அரசுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் அமைத்திருக்கிறது. எனவே, சிறுவன் ரோகித் கொலை செய்யப்பட்ட இவ்வழக்கில், ஈவு இறக்கமற்ற செயலில் ஈடுபட்ட அந்த கும்பலை உடனடியாக கைது செய்து, அக்குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்க தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.