Parenting Tips : எந்த சூழ்நிலையிலும் குழந்தையிடம் சொல்லக்கூடாத வார்த்தைகள்
குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோர்களின் நடத்தை ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நேர்மையான முறையில் வளர்க்க வேண்டும் என்றால் தங்கள் நடத்தையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

Parents Behavior Impacts Child Growth
சில நேரங்களில் குழந்தைகளிடம் பேசும் பொழுது கடுமையான விஷயங்களை பேசி விட நேர்கிறது. இது தெரிந்தோ தெரியாமலோ குழந்தைகளின் வளர்ச்சியையும், மனநிலையையும் பாதிக்கிறது. அப்படி குழந்தைகளிடம் என்ன விஷயங்களை பேசக் கூடாது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். மகிழ்ச்சி, சிரிப்பு, கவலை, பசி என அனைத்து உணர்வுகளும் மனிதர்களுக்கு பொதுவானது. அழுது கொண்டிருக்கும் ஆண் குழந்தையிடம், “நீ ஒரு பெண்ணை போல் அழுகிறாய்” என்று சொல்வது முற்றிலும் தவறு. அழுகை என்பது பெண்ணுக்கான உணர்ச்சி மட்டுமல்ல. இந்த சிந்தனையை நாம் முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
பெண்ணைப் போல அழுகிறாய் எனக்கூற கூடாது
பெண் மட்டுமே அழ வேண்டும் என்கிற ஆழமான உணர்வை ஆண் குழந்தைகளிடம் பதிய வைக்கக் கூடாது. ஆண், பெண் என்கிற பாகுபாடு இங்கிருந்தே தொடங்குகிறது. உணர்வுகளை வெளிப்படுத்தும் குழந்தையை அடக்குகிறேன் என்ற பெயரில் கடுமையான வார்த்தைகளை உபயோகிக்க கூடாது. நிறம் குறித்த பாகுபாட்டை குழந்தைகள் மனதில் விதைக்கக் கூடாது. உதாரணமாக சில உணவுகளை சாப்பிட்டால் கருப்பாக மாறிவிடுவாய் என்றோ, நிறம் குறைவாக இருப்பவர்களை பார்த்து பூச்சாண்டி என்றோ பயமுறுத்தும் வேலைகளில் ஈடுபடுதல் கூடாது. நிறத்தை வைத்து பாகுபடுத்தும் எந்த ஒரு சொல்லையும் குழந்தைகளிடம் கூறுதல் கூடாது.
குழந்தைகளை விலங்குகளுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது
சில நேரங்களில் குழந்தைகள் கோபமாக முகத்தை வைத்திருக்கும் பொழுது, இப்போது உன் முகம் இந்த விலங்கு போல இருக்கிறது, அப்படி இருக்கிறது, இப்படி இருக்கிறது என்று எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது. மேலும் கோபத்தில் சில விலங்குகளின் பெயரை குறிப்பிட்டு அல்லது விலங்குகளுடன் ஒப்பிட்டு திட்டுதல் கூடாது. குழந்தைகளின் உடல் அமைப்பு குறித்தோ அல்லது அவர்களின் வடிவம் குறித்தோ கிண்டலாகவோ, கேலியாகவோ சில பெற்றோர்கள் பேசுவார்கள். அது குழந்தைகளுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தலாம். உணர்ச்சி ரீதியான பாதிப்பு ஏற்படுத்தும் பொழுது அவர்கள் தன்னம்பிக்கை மிகவும் குறைந்துவிடும். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.
மட்டம் தட்டும் சொற்களை பயன்படுத்தக்கூடாது
குழந்தைகளின் சுயமரியாதையும், தன்னம்பிக்கையும் குலைக்கும் விதமாக பேசுதல் கூடாது. உறவினர்கள் யாரேனும் வீட்டிற்கு வந்திருந்தால் குழந்தைகளை தரக்குறைவாக நடத்துதல் கூடாது. மேலும் குழந்தைகளிடம் இருக்கும் குறைகளை உறவினர்களிடம் சொல்லி மட்டம் தட்டுதல் கூடாது. குழந்தைகளை மற்றொரு குழந்தைகளுடன் ஒப்பிடக்கூடாது. ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறமை இருக்கும். எனவே உங்கள் குழந்தைக்கு என்ன தனித்திறமை இருக்கிறதோ அதை கண்டறிந்து அதில் அவர்களை சிறப்பானவர்களாக மாற்ற வேண்டுமே, தவிர மற்றொரு குழந்தையை போல மாற்ற முயற்சிக்கக் கூடாது.
அவதூறான வார்த்தைகளை உபயோகப்படுத்தக்கூடாது
குழந்தைகளை அவமானப்படுத்தும் அல்லது அவர்களின் சுயமரியாதையை குறைக்கும் வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. "முட்டாள்", "சோம்பேறி", "உனக்கு எதுவும் தெரியாது" போன்ற வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் முன்பு கெட்ட வார்த்தைகள் பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும். குழந்தைகளை பயமுறுத்தும் அல்லது அச்சுறுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. "உன்னை கை கழுவி விடுவேன்", "உன்னை அடிப்பேன்" “ஹாஸ்டலில் சேர்த்து விடுவேன்”, வீட்டை “விட்டு துரத்தி விடுவேன்” போன்ற வார்த்தைகள் அவர்களின் மனதில் பயத்தை ஏற்படுத்தும்.
பெற்றோர்களின் கையில் தான் உள்ளது
குழந்தைகள் நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் மாறுவது பெற்றோர்களின் கையில்தான் உள்ளது. எனவே மென்மையுடன் கூடிய கண்டிப்புடன் குழந்தைகளை வளர்க்க கற்றுக் கொள்ளுங்கள். இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் பிறருக்கும் பகிருங்கள்.